உயர் தாவரங்களில் பதியமுறை இனப்பெருக்கமே மிகச் சாதாரணமான இலிங்கமில்முறை இனப்பெருக்கமாகும்.
தாவரங்களின் பதியப் பகுதிகள் இனம்பெருக்கும் அங்கங்களை உருவாக்கும்.
வேர்த்தண்டுக் கிழங்கு , தண்டுக்கிழங்கு , குமிழ் , முகிழ் போன்றன நிலக்கீழ்த் தண்டுகள்.தரை மட்டத்தில் கிடையாக வளர்பவை ஓடிகள். குமிழம் காற்றுக்குரிய பகுதிகளில் இருந்து தோற்றுவிக்கப்படும். இடமாறிப் பிறந்த அரும்புகள் தண்டு தவிர்ந்த தாவரத்தின் ஏனைய பகுதிகளில் இருந்து தோற்றுவிக்கப்படும்.
இவற்றுள் சில உணவைச் சேமித்து பல்லாண்டு வாழுகின்ற அங்கமாகக் காணப்பட்டு தகாத காலங்களைக் கழிக்கும்.
வேர்த்தண்டுக் கிழங்கு
கிடையாக வளரும் நிலக்கீழ்த்தண்டு. பெரும்பாலும் மண் மேற்பரப்பை அண்மித்து இருக்கும். காற்றுக்குரிய அங்குரம் , செதிலிலைகள் , உறங்குநிலையிலுள்ள அரும்புகள் , வேர்கள் என்பவற்றுடன் இடம்மாறிப் பிறந்த வேர்களையும் கொண்டது.
குறுகிய புடைத்த நிலைக்குத்தாக வளரும் நிலக்கீழ்த் தண்டு உறங்கு நிலையிலுள்ள அரும்புகள் , செதிலிலைகள் , காற்றுக்குரிய அங்குரம் , வேர்கள் ,இடம் மாறிப்பிறந்தவேர்கள் என்பவற்றைக் கொண்டவை.
புடைத்த இலையடிகளால் தோற்றுவிக்கப்பட்ட குமிழ் கொண்ட மிகக் குறுகிய நிலக்கீழ்த் தண்டு.
குமிழிற்கான உதாரணங்கள்:- Allium , Crinum
ஓடிகள்
மண் மேற்பரப்பின் மேல் கிடையாக வளரும் பக்கக் கிளைகள் நிமிர்ந்த தண்டின் கக்கவரும்பில் இருந்து தோற்றுவிக்கப்படும். புதிய அங்குரங்கள் இடம் மாறிப்பிறந்த வேர்கள் என்பன கக்கவரும்பில் இருந்து தோன்றும்.
நிலக்கீழான தண்டின் கிளைகள் பருத்து சேமிப்பு அங்கமாகப் பயன்படும்.
இவை உறங்கு நிலையிலுள்ள கக்கவரும்புகளையும் , செதிலிலைகளையும் கொண்டவை. பல்லாண்டு வாழும் அங்கமாகப் பயன்படும்.
முகிழிற்கான உதாரணங்கள்:- Solanum
குமிழம்
காற்றுக்குரிய தண்டுகளின் கக்கவரும்பு , இலைகள் கொண்ட சிறிய அங்குரமாக வளர்ச்சி அடையும். இவை பிரதான தண்டுகளில் இருந்து வேறாக்கப்பட்டு புதிய தாவரத்தை உற்பத்தியாக்கும்.
குமிழத்திற்கான உதாரணங்கள்:- Ananas, Dioscoria
இடம்மாறிப் பிறந்த அரும்புகள்
தண்டு தவிர்ந்த தாவரத்தின் ஏனைய பதியப் பாகங்களில் இருந்து அரும்புகள் உருவாதல். இலைகளில் இருந்து புதிய தாவரங்கள் தோன்றுதல்.
இடம்மாறிப் பிறந்த அரும்புகளிற்கான உதாரணங்கள்:-Bryophyllum, Begonia
தாவரங்களைப் பதியமுறையில் இனப்பெருக்கும் முறைகள்
வெட்டுத் தண்டு
கக்கவரும்புகள் கொண்ட தண்டுகளின் வெட்டுத் துண்டுகள் செயற்கையாக மண்ணில் நாட்டப்படுதல்.சிலவேளைகளில் ஒட்சின்களும் பயன்படுத்தப்படுகின்றது.
வெட்டுத் தண்டின் பயன்பாட்டிற்கான உதாரணங்கள்:- Manihot, Ipomoea, Camelia , Rosa
அரும்பொட்டுதல்
ஒரு தாவரத்தின் கக்கவரும்பை இன்னுமொரு வேருள்ள தாவரத்தின் தண்டிற்கு மாற்றி நடுதல்.
மாற்றி நடப்படும் அரும்பு – ஒட்டுமுளை
ஒட்டுமுளை ஒட்டுக்கட்டையின் மீது ஒட்டப்படும் ஒட்டுமுளை , ஒட்டுக்கட்டை என்பன வேறுபட்ட பேதங்களை அல்லது நெருக்கமான உறவுள்ள இனங்களைச் சேர்ந்தவையாக இருக்கலாம்.
ஒட்டுதல் முறையில் கக்கவரும்பு கொண்ட மரவுரித் துண்டைக் கவனமாக வெட்டியெடுத்தல் கூரிய கத்தியினால் ஒட்டுக்கட்டையின் மரவுரியைத் திறத்தல் , மாறிழையங்கள் தொடர்புறத்தக்கவாறு ஒட்டுமுளையை மாற்றி நடுதல் , ஒட்டுநாடாவினால் சுற்றிக்கட்டி ஒட்டுமுளையானது ஒட்டுக்கட்டையுடன் இணையும் வரை விடுதல் என்பன அடங்கும்.
அரும்பொட்டுதலின் அனுகூலங்களாவன் தாவரங்களை விரைவாக இனப்பெருக்குதல் , தாய்த் தாவரத்தை ஒத்த இயல்புடைய தாவரங்களைப் பெறுதல் , வேறுபட்ட பேதங்களின் வேர்களையும் அங்குரங்களையும் இணைத்தல் போன்றன.
அரும்பொட்டலிற்கான உதாரணங்கள் :- Rosa போன்ற அழகிற்காக வளர்க்கப்படும் தாவரங்கள் Mangifera போன்ற கனி கொடுக்கும் தாவரங்கள்.
தண்டொட்டுதல்
ஒட்டுமுளையாக அரும்புகளிற்குப் பதிலாக அங்குரங்கள் பயன்படுத்தப்படுவது தவிரப் பல வழிகளில் அரும்பொட்டுதலை ஒத்தது.
தாவர இழைய வளர்ப்பு
கிருமியழிக்கப்பட்ட , செயற்கையான வளர்ப்பு ஊடகங்களில் உள்ளக நிபந்தனையின் கீழ் தாவர இழையங்களை வளர்த்தல்.
அநேகமான தாவரக் கலங்கள் totipotent அதாவது தாவரக் கலங்களிற்குப் பொருத்தமான நிபந்தனைகள் வழங்கப்படும் போது அவை பூரணமான தாவரமாக வளரக் கூடிய தகைமை உள்ளவை.
வளர்ப்பு ஊடகங்களில் தாவர வளர்ச்சிப் பதார்த்தங்களின் பங்கு சைற்றோகைனினும் , ஒட்சின்களும் கலப்பிரிவிலும் , கலங்களினது வியத்தத்திலும் பங்கெடுக்கும். ஒட்சின் வேரினது வளர்ச்சியையும் , சைற்றோகைனின் அங்குர வளர்ச்சியையும் தூண்டும்.
வளர்ப்பு ஊடகத்தின் கூறுகளாக நீர் , அசேதன போசணைப் பொருட்கள் , ஒரு காபன் மூலம் (சுக்குரோசு பெரும்பாலும் பயன்படுத்தப்படும்) , தாவர வளர்ச்சிப் பதார்த்தங்கள் , வேறு தேவையான சேதன போசணைப் பதார்த்தங்கள் என்பன உள்ளடக்கப்படும்.
வளர்ப்பு ஊடகத்தில் ஒட்சின் , சைற்றோகைனின்கள் என்பவற்றின் விகிதங்கள் வளர்ச்சி இயல்புகளைத் தீர்மானிக்கும்.
முனையரும்பு , கக்கவரும்பு , தண்டு , இலை , கேசரம் , முளையம் உள்ளடங்கலாக பல்வேறுபட்ட தாவரப் பாகங்கள் , ஆரம்பத் தாவரப் பகுதிகளாக இழையவளர்ப்பை ஆரம்பித்து வைப்பதற்குப் பயன்படுத்தலாம்.
ஊடகத்தைக் கிருமியழிக்கப்பட்ட நிபந்தனையில் பேணுதலும் தொற்று நீக்கப்பட்ட நிபந்தனையைப் பயன்படுத்தலும் முக்கியமானவை.இழைய வளர்ப்பில் ஆரம்பத் தாவரப் பகுதிகளில் இருந்து தோற்றுவிக்கப்படும் வியத்தமடையாத பிரிகையடையக் கூடிய கலங்களின் திணிவு மூடுபடை (Callus) எனப்படும்.
வளர்ப்பு ஊடகத்தையும் , நிபந்தனைகளையும் திறமையாகக் கையாளுவதன் மூலம் மூடுபடை மீது வேர்கள் , அங்குரங்கள் என்பவற்றின் உருவாக்கத்தைத் தூண்ட முடியும்.
நுண்பெருக்கத்தின் படிகளும் , செயன்முறைகளும்.
கூடிய எண்ணிக்கையில் தாவரங்களை உற்பத்தியாக்க நுண்பெருக்கம் (Micro Propogation) இழையவளர்ப்புத் தொழில்நுட்பத்தில் பயன்படுத்தப்படுகின்றது.
பொருத்தமான ஆரம்பத் தாவரப் பகுதிகளைத் தயார்ப்படுத்தல் , ஒரு பொருத்தமான வளர்ப்பு ஊடகத்தைத் தொற்று நீக்கித் தயார்ப்படுத்தல் , வளர்ப்பு ஊடகத்தைத் தொடக்கி வைத்தல் , அங்குரங்களைத் தூண்டல் , அங்குரங்களைப் பெருக்குதல் , வேர்களைத் தூண்டுதல் , சிறு தாவரங்களைக் (Plantlets) காலவிணக்கப்படுத்தல் என்பன உள்ளடக்கப்படும்.
நுண்பெருக்கத்தின் நன்மைகளாவன சிறிய பிரதேசத்தில் விரைவாக ஓரே பிறப்புரிமையமைப்பு உடைய தாவரங்களை கூடுதலான எண்ணிக்கையில் உற்பத்தி செய்தல் , நோயற்ற தாவரங்களை உற்பத்தியாக்கல் , வாழ்தகவு உள்ள வித்துக்களைத் தோற்றுவிக்க முடியாத தாவரங்களின் இனப்பெருக்கம் என்பவற்றுடன் இந்நுட்பமுறையில் காலநிலை நிபந்தனைகள் பற்றிக் கருத்திலெடுக்கவும் தேவையில்லை.
நுண்பெருக்கம் தவிர மூலவுயிருருவின் உறைகனிக் காப்பு (Cryopreservation of germ plasm),பாரம்பரிய மாற்றியமைப்பு செய்யப்பட்ட தாவரங்களின் உற்பத்தி , ஒரு மடியத தாவரங்களைப் பெறுதல் போன்ற வேறு நோக்கங்களுக்காகவும் இழைய வளர்ப்பு பயன்படுத்தப்படுகின்றது.
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்