Please Login to view full dashboard.

ஒளிச்சுவாசம்,C3,C4

Author : Admin

8  
Topic updated on 02/14/2019 03:53am

ஒளிச்சுவாசம்Please Login to view the Question

  • இச்செயன்முறையானது பச்சையவுருமணியின் பஞ்சணையில் CO2 செறிவு குறைவாகவும் O2 செறிவு அதிகமாக உள்ளபோதும் நிகழும்.
  • இத் செயன்முறையை RUBP Carboxylase ஊக்குவிக்கின்றது.
  • இதன் விளைவாக ஒரு மூலக்கூறு 3C PGA உம் ஒரு மூலக்கூறு 2C பொஸ்போகிளைக்கோலேற்றும் உருவாக்கப்படுகின்றது.
  • இச் செயன்முறையால் CO2 பதித்தல் நிரோதிக்கப்படுகின்றது. அத்துடன் C, CO2 ஆக இழக்கப்படுகின்றது.
  • எனவே ஒளிச்சுவாசம் ஒளித்தொகுப்பு வினைத்திறனைக் குறைக்கின்றது.
  • இத்தாக்கம் ஒளியுள்ள போது / பகல் வேளையில் நிகழும் அத்துடன் இதன் விளைவான பொஸ்போகிளைக்கோலேற்று பச்சையவுருமணியை விட்டு நீக்கி பேரொக்சிசோம் / இழைமணியினுள் சென்று அங்கு CO2 ஆக வெளிவிடப்படுகின்றது.
  • எனவே ஒளிச்சுவாசத்துடன் தொடர்பான கலப்புன்னங்கங்கள் பச்சையவுருமணி, இழைமணி, பேரொக்சிசோம்.
  • ஒளிச்சுவாசம் எனப்படுவது RUBP, RUBP Carboxylase ஊக்குவிப்பால் O2 ஆல் ஒட்சியேற்றப்பட்டு 3C சேர்வையான PGA யும் 2C சேர்வையான பொஸ்போகிளைக்கோலேற்றையும் தரும் செயன்முறையாகும்.

C3 தாவர இலை ஒளித்தொகுப்பை வினைத்திறனாக்க கொண்டுள்ள இசைவாக்கங்கள் Please Login to view the Question

  • ஒளித்தொகுப்பின் CO2 பகுதித்தலில் முதல் உறுதியான விளைபொருளாக C3 சேர்வையான PGA பெறப்பட்டால் அவ் CO2 பதித்தல் பாதை C3 பாதை எனப்படும். அதை மேற்கொள்ளும் இலைகள் C3 இலைகள் எனப்படும். அவ் இலைகளை கொண்டுள்ள தாவரம் C3 தாவரம் எனப்படும்.
  • C3 தாவர இருவித்திலை இலையிலிருந்து ஒருவித்திலை இலைகள் பின்வரும் இயல்புகளில் வேறுபடுகின்றன.
    1. வேலிக்காற்புடைக்கலவிழையம், கடற்பஞ்சுப் புடைக்கலவிழையம் என வியத்தமடையாத இலைநடுவிழையம் காணப்படல்.
    2. காவற்கலம் டம்பல் வடிவம்.
  • C3 தாவர இலைகளில் இலைநடுவிழையக் கலங்களில் பிரதானமாக பச்சையவுருமணி காணப்படுகின்றது. இதுவே ஒளித்தொகுப்பு இழையம் எனப்படும்.
  • சகல பச்சையவுருமணிகளும் அமைப்பில் ஒத்தவை. எனவே ஒரு வகையான பச்சையவுருமணிகளைக் கொண்டவை.
  • இச்சிறப்பம்சங்கள் இரு வகைப்படும்.
    1. கட்டமைப்பு சார்ந்த சிறப்பியல்புகள்
    2. உடற்தொழிலியல் சார்ந்த சிறப்பியல்புகள்

கட்டமைப்பு சார்ந்த

இசைவாக்கம் ஒளித்தொகுப்பை வினைத்திறனாக்கும் முறை
மெல்லிய தட்டையான இலைகள் இதன் மூலம் மேற்பரப்பு அதிகரிக்கப்பட்டு ஒளி அகத்துறிஞ்சல் வீதம் அதிகரிக்கப்படும்
ஒளி ஊடுபுகவிடக் கூடிய புறத்தோல், மேற்றோல் காணப்படுதல் ஒளிக்கதிர்கள் இலகுவாக ஊடுருவி ஒளித்தொகுப்பு வீதம் அதிகரிக்கப்படுதல். (ஒளி ஊடுருவல் வீதம் அதிகரிக்கப்படும்)
வேலிக்காற் புடைக்கலவிழையக் கலங்கள் நிலைக்குத்தாக, நெருக்கமாக ஒழுங்குபடுத்தப்பட்டிருத்தல் நிலைக்குத்தாகக் காணப்படுவதால் அதிக எண்ணிக்கையான வேலிக்காற் புடைக்கலவிழையக் கலங்கள் காணப்படுகின்றன

நெருக்கமாகக் காணப்படுவதால் ஒளி வீண்விரயம் தடுக்கப்படும்

வேலிக்காற் புடைக்கலவிழையக் கலங்கள் அதிக எண்ணிக்கையான பச்சையவுருமணிகளால் நிரப்பப்பட்டு இருத்தல் ஒளி அகத்துறிஞ்சல் வீதம் அதிகரிக்கப்படும்
கடற்பஞ்சுப் புடைக்கலவிழையக் கலங்கள் கலத்திடைவெளியுடன் ஒழுங்கற்றுக் காணப்படல். காற்று இடைவெளி கொண்டிருத்தல் வாயுப்பரிமாற்ற வினைத்திறன் அதிகரிக்கப்படும்
வலையுருவான / ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்ட காழ், உரிய இழையம் கொண்ட கலன்கட்டு காணப்படுதல் காழ் இழையம் ஒளித்தொகுப்பு மூலப்பொருளான நீரை வினைத்திறனாக வழங்குகின்றது

உரிய இழையம் தொகுக்கப்பட்ட உணவை வினைத்திறனாக அகற்றுகின்றது. இதனால் ஒளித்தொகுப்பு வீதம் அதிகரிக்கப்படும்

அதிக எண்ணிக்கையான பெரிய இலைவாய்கள் காணப்படல் வாயுப்பரிமாற்ற வினைத்திறன் அதிகரிக்கப்படுகின்றது

உடற்தொழிலியல் சார்ந்த

Firstname Lastname
தாவர இலைகளின் மேற்பரப்பு ஒளியை நோக்கி ஒழுங்குபடுத்தப்பட்டிருத்தல் அல்லது இலையின் ஒளித்திருப்பம் / இலையின் ஒளித் திசைகோட் சேர்க்கை காணப்படல் ஒளி அகத்துறிஞ்சல் வீதம் அதிகரிக்கப்படும்
வேலிக்காற்புடைக்கலவிழையக்கலங்களில் காணப்படும் பச்சையவுருமணிகள் குறைவான ஒளிச்செறிவில் ஒளியை நோக்கி மேற்பரப்பிற்கு அசைதல் வாயுப்பரிமாற்ற வினைத்திறன் ஒளி உள்ளபோது அதிகரிக்கப்படுதல்
ஒளி உள்ளபோது இலைவாய் திறக்கப்படலும் ஒளியில்லாத போது இலைவாய் மூடுதலும் வாயுப்பரிமாற்ற வினைத்திறன் ஒளி உள்ளபோது அதிகரிக்கப்படுதல்

C4 தாவர இலை, C4 பாதை, C4 தாவரம் Please Login to view the QuestionPlease Login to view the Question

c3-c4

  • ஒளித்தொகுப்பின் CO2 பதித்தலில் முதல் உறுதியான விளைப்பொருளாக 4C சேர்வையான OAA (ஒக்சலோ அசற்றிக்கமிலம்) பெறப்படின் அவ் CO2 பதித்தல் பாதை C4 பாதை எனப்படும். இப் பாதையைக் காண்பிக்கும் இலைகள் C4 தாவர இலை எனப்படும். அத்தாவரம் C4 தாவரம் எனப்படும்.
    C4 தாவர இலைகள் C3 தாவர இலைகளிலிருந்து கட்டமைப்பில் வேறுபாட்டைக் காட்டுகின்றன.
  • C4 தாவர இலையின் குறுக்குவெட்டு முகத்தோற்றம்
  • C3 தாவர இலைக்கும் C4 தாவர இலைக்கும் இடையிலான வேறுபாடுகள்
C3 தாவர இலை C4 தாவர இலை
ஒரு வகையான பச்சையவுருமணி 2 வகையான பச்சையவுருமணிகள் காணப்படும். அவையாவன
1. கட்டுமடல்கல பச்சையவுருமணி
2. இலைநடுவிழையப் பச்சையவுருமணி
Kranz கட்டமைப்பு இலையில் காணப்படுவது இல்லை. அதாவது கலன்கட்டைச் சூழ ஒரு வளையத்தில் கட்டுமடல் கலங்கள் மட்டும் காணப்படும் Kranz கட்டமைப்பு காணப்படும் அதாவது கலன்கட்டைச் சூழ 2 வலயக் கலங்கள் காணப்படும். உள்வளையம் கட்டுமடல் கலங்கள், வெளிவளையம் இலைநடுவிழையக் கலங்கள்
இலைநடுவிழையக் கலங்களில் மட்டும் பச்சையவுருமணி காணப்படும் இலைநடுவிழையக் கலங்களிலும் கட்டுமடல்கலங்களிலும் பச்சையவுருமணிகள் காணப்படும்
  • வேறுபாடுகள்
இலைநடுவிழையக்கலப் பச்சையவுருமணி கட்டுமடல்கலப் பச்சையவுருமணி
பருமனில் சிறியவை பருமனில் பெரியவை
நன்கு விருத்தியடைந்த மணியுருக்கள் மிகவும் ஒடுக்கமடைந்த மணியுருக்கள்
பஞ்சணை ஒடுக்கப்பட்டது RUBP Carboxylase இல்லை / குறைந்த செறிவு நன்கு விருத்தியடைந்த பஞ்சணை RUBP Carboxylase உயர் செறிவு
மாப்பொருள் மிகக் குறைவுஅதிகளவில் மாப்பொருள் மணிகள் காணப்படும்
  • C4 தாவர இலைகளில் இலைநடுவிழையக் கலங்களும் கட்டுமடல் கலங்களிலும் தொழிற்பங்கீடு காணப்படுகின்றது அதாவது ஒளித்தாக்கத்திற்கு இலைநடுவிழையப் பச்சையவுருமணிகளும் Calvin வட்ட CO2 பதித்தலுக்கு கட்டுமடல் பச்சையவுருமணிகளும் சிறத்தலடைந்துள்ளது.

C4 பாதை

c4-pathway

  • C4 தாவர இலைகளில் ஒளித்தாக்கம் இலை நடுவிழையக் கலத்தின் பச்சையவுருமணியில் நிகழும். இது C3 தாவர ஒளிதாக்கத்திற்கு ஒத்தது.
  • ஆனால் CO2 பதித்தல் இலைநடுவிழையக் கலங்களின் குழியவுருவிலும் கட்டுமடல்கலத்தின் பச்சையவுருமணியிலும் நிகழ்கின்றது. எனவே, இரு கலங்களிலும் நிகழ்கின்றது.
  • CO2 பதித்தல் முதலில் இலைநடுவிழையக் கலத்தில் நடைபெறும் வளிமண்டல CO2 அக்கலக் குழியவுருவிலுள்ள 3C சேர்வையான PEP இனால் வாங்கப்பட்டு 4C உறுதியான சேர்வையான OAA உருவாக்கப்படும். இதுவே முதல் உறுதி விளைபொருள் ஆகும். இவ்மாற்றத் தாக்கமானது PEP Carboxylase நொதியத்தால் ஊக்குவிக்கப்படுகின்றது.
  • OAA,Malate (4C) ஆகத் தாழ்த்தப்படுகின்றது. இத்தாழ்த்தலுக்குH+ வழங்கியாக NADPH தொழிற்பட்டு NADP ஆக மாற்றப்படுகின்றது.
  • Malate முதலுரு இணைப்பினூடாக கட்டுமடல் கலத்தை அடைகின்றது. அங்கு ஒட்சியேற்றத்திற்கும் CO2 அகற்றலுக்கும் உட்பட்டு 3C Pyruvate மூலக்கூறையும் CO2 ஐயும் உருவாக்கும். இவ் ஒட்சியேற்றத்தில் H வாங்கியாக NADP தொழிற்பட்டு NADPH ஆக மாற்றமடைகின்றது.
  • 3C Pyruvate ATP ஐ பயன்படுத்தி PEP ஆக புத்துயிர்ப்பு அடைகின்றது.
  • Malate இலிருந்து விடுவிக்கப்பட்ட CO2 கட்டுமடல் கலத்தின் பச்சையவுருமணியின் பஞ்சணையிலுள்ள 5C CO2 வாங்கியான RUBP ஆல் பதிக்கப்பட்டு உறுதியான சேர்வையான 2 மூலக்கூறு 3C PGA ஆக மாற்றப்படும். இத்தாக்கத்தை RUBP Carboxylase ஊக்குவிக்கும்.
  • PGA Calvin வட்டத்தைத் தொடரும்.
  • C3, C4 தாவரங்களுக்கிடையிலான வேறுபாடு
C3 தாவரம் C4 தாவரம்
Eg: மாமரம் , செவ்வரத்தை Eg: கரும்பு,சோளம்,கீரை,சில புற்கள்
ஒரு வகைப் பச்சையவுருமணி இருவகைப் பச்சையவுருமணி
இலையில் Kranz கட்டமைப்பு காணப்படாது Kranz கட்டமைப்பு காணப்படும்
CO2 ஒரு தடவை பதிக்கப்படும் CO2 இரு தடவை பதிக்கப்படும்
முதல் உறுதியான விளைபொருள் 3C PGA முதல் உறுதியான விளைபொருள் 4C OAA
ஒளிச்சுவாசம் நிகழும் . ஒளிச்சுவாசம் நிகழ்வதில்லை
வெப்பநிலை அதிகரித்து உயர் வெப்பநிலையில் ஒளித்தொகுப்பு வீதம் குறைவடையும் (இலைவாய் மூடப்படுவதால்) உயர் வெப்பநிலையிலும் ஒளித்தொகுப்பு வினைத்திறனாக நிகழும்.
(உயர் வெப்பத்திற்கு இசைவாக்கப்பட்ட தாவரங்கள்)
ஒளித்தொகுப்பு வினைத்திறன் ஒப்பீட்டளவில் குறைவு           (C இழப்பு உண்டு) ஒப்பீட்டளவில் கூட
(C இழப்பு இல்லை)
உயர் ஒளிச் செறிவிலும் ஒளித்தொகுப்பு வீதம் குறைவடையும் பாதிப்படையாது
நீர் இழப்பு அதிகம் நீர் இழப்பு குறைவு
  • C3 தாவர இலைகளில் ஒரு பச்சையவுருமணியினுள் ஒளித்தாக்கமும் CO2 பதித்தலும் நிகழ்வதால் O2 செறிவு அதிகரித்து CO2 செறிவு குறையும் சந்தர்ப்பம் காணப்படுகின்றது. ஆனால் C4 தாவர இலைகளில் ஒளித்தாக்கம் இலைநடுவிழையக்கலப் பச்சையவுருமணியிலும் CO2 பதித்தல் / Calvin வட்டம் கட்டுமடல் கலத்தில் நிகழ்வதால் கட்டுமடல் கலப் பச்சையவுருமணியில் O2 செறிவு அதிகரிக்கும் சந்தர்ப்பம் குறைவு. அத்துடன் இப் பச்சையவுருமணியில் Malate இலிருந்து விடுவிக்கப்படும் CO2 உம் வளிமண்டல CO2 உம் காணப்படுவதால் CO2 செறிவு எப்போதும் உயர்வாகக் காணப்படும். எனவே C4 தாவர இலைகளில் ஒளிச்சுவாசம் நிகழ்வதில்லை.

C3 தாவர ஒளித்தொகுப்பை விட C4 தாவர ஒளித்தொகுப்பு வினைத்திறனானது. இதற்கான காரணங்கள்Please Login to view the Question

  1. PEP / PEP Carboxylase, RUBP /  RUBP Carboxylase ஐ விட CO2 பதித்தலில் வினைத்திறனானது அதாவது PEP குறைந்த CO2 செறிவிலும் அதனை வாங்கி OAA யாக மாற்றும். ஆனால் RUBP குறைந்த செறிவில் தன்னுடன் சேர்க்காது இதனால் C4 ஒளித்தொகுப்பு வினைத்திறன் ஆக்கப்படுகின்றது.
  2. C4 தாவரத்தில் இரு தடவை CO2 பதிக்கப்படுகின்றது. C3 தாவரத்தில் ஒரு தடவை CO2 பதிக்கப்படுகின்றது. இதனால் Cதாவரத்தின் கட்டுமடல் கலத்தின் பச்சையவுருமணியில் CO2 செறிவு உயர்வாகக் காணப்படும். (Malate இலிருந்து விடுவிக்கப்பட்ட CO2 + வளிமண்டல் CO2) எனவே C3 தாவர RUBP யின் CO2 பதித்தலை விட C4 தாவரத்தில் RUBP யின் CO2 பதித்தல் வினைத்திறன் ஆக்கப்படுகின்றது.
  3. C4 தாவரத்தில் ஒளிச்சுவாசம் நடைபெறுவதில்லை. காரணம் கட்டுமடல் கலப் பச்சையவுருமணியில் CO2 செறிவு உயர்வாகக் காணப்படும். எனவே CO2 பதித்தல் பாதிக்கப்படுவதில்லை. காபன் இழப்பு ஏற்படுவதில்லை. ஆனால், C3 தாவரத்தில் ஒளிச்சுவாசம் நிகழ்கின்றது. எனவே RUBP யின் CO2 பதித்தல் பாதிக்கப்படுகின்றது. C இழப்பு ஏற்படுகின்றது.
  4. Cதாவரம் உயர் ஒளிச்செறிவிலும் ஒளித்தொகுப்பை வினைத்திறனாக மேற்கொள்கின்றது.

ஒளித்தொகுப்பைப் பாதிக்கும் காரணிகள்

  • ஒளித்தொகுப்பைப் பாதிக்கும் புறக்காரணிகளாவன
    1. சூழல் ஒளிச்செறிவு
    2. சூழல் வெப்பநிலை
    3. CO2 செறிவு
    4. (மண்ணிலுள்ள) நீரின் அளவு
  • அகக்காரணி – பச்சையம்

Blackmann இன் எல்லைப்படுத்தும் காரணிக் கொள்கை.

  • ஒரு இரசாயனத் தாக்கமானது ஒன்றுக்கு மேற்பட்ட காரணிகளால் பாதிக்கப்படும் போது குறைந்த செறிவில் உள்ள காரணி அத்தாக்கத்தை எல்லைப்படுத்தும்.
  • எனவே இத்தகைய இரசாயனத் தாக்கங்களுக்கு ஒரு காரணியின் அளவை மட்டும் அதிகரிக்கும் போது தாக்கவீதம் அதிகரித்துப் பின் மாறாது இருக்கும் மாறாது இருப்பதற்குக் காரணம் மற்றைய காரணிகளில் ஒன்று எல்லைப்படுத்துவதாகும்.

ஒளிச்செறிவு

photosynthesis-light-graph

  • A பகுதியில் ஒளிச்செறிவு, தாக்கத்தை எல்லைப்படுத்துகின்றது.
    B பகுதியில் ஒளிச்செறிவுடன் வேறு ஒரு காரணியும் எல்லைப்படுத்துகின்றது.
    C பகுதியில் முற்றிலுமாக வேறு ஒரு காரணி எல்லைப்படுத்துகின்றது.
  • பொதுவாக தரைத்தாவரங்களில் ஒளித்தொகுப்பை ஒளிச்செறிவு எல்லைப்படுத்துவதில்லை.
  • நீர்த் தாவரங்களில் ஒளிச்செறிவு எல்லைப்படுத்துகின்றது.
  • குறைந்த ஒளிச்செறிவில் ஒளித்தொகுப்பு வீதம் குறைவடையும் காரணம் ஒளிச்சக்தியைப் பயன்படுத்த உற்பத்தியாகும் ATP,NADPH இன் அளவு குறையும். அதைப் பயன்படுத்தி உற்பத்தியாகும் Glucose /  காபோவைதரேற்றின் அளவு குறையும். ஃ ஒளித்தொகுப்பு வீதம் குறையும்.
  • ஒளிச்செறிவைக் கூட்டும் போது ஒளித்தொகுப்பு வீதமும் அதிகரிக்கும்.
  • அதிகூடிய / மிகையான ஒளிச்செறிவில் குளோரபில் வெளிற்றப்படுவதில் ஒளித்தொகுப்பு பாதிப்படையும்.

CO2 செறிவு

  • CO2 செறிவை அதிகரிக்கும் போது ஒளித்தொகுப்பு வீதமும் அதிகரிக்கும். (ஏனைய காரணிகள் எல்லைப்படுத்தாதவிடத்து)
  • குறைந்த CO2 செறிவில் CO2 பதித்தல் குறைக்கப்படுவதால் உற்பத்தியாக்கப்படும் PGA,PGAL,Glucose இன் அளவு குறைக்கப்படும் அதாவது ஒளித்தொகுப்பு குறைக்கப்படும்.
  • தரைத் தாவரங்களில் பொதுவாக ஒளித்தொகுப்பை எல்லைப்படுத்தும் காரணி CO2 ஆகும்.

வெப்பநிலை

photosynthesisgraph3

  • ஒளித்தொகுப்பில் ஒளித்தாக்கம் குறைந்து நொதியக்கட்டுப்பாட்டுக்கும் இருள் தாக்கம் அதிகளவு நொதியக் கட்டுப்பாட்டுக்குமுரியது. எனவே முதல் 35°C மட்டும் வெப்பநிலையை அதிகரிக்கும் போது ஏனைய காரணிகள் எல்லைப்படுத்தாதவிடத்து தாக்கவீதம் மடங்காக அதிகரிக்கும். அதன்பின் நொதியங்கள் / புரதங்கள் அமைப்பழியத் தொடங்குவதால் ஒளித்தொகுப்பு வீதம் குறைவடைந்து 60°C யில் முற்றாக அமைப்பழிவதால் தாக்க வீதம் நிறுத்தப்படும்.

குளோரபில்

  • பொதுவாகப் பச்சையம் எல்லைப்படுத்தும் காரணியாகத் தொழிற்படுவதில்லை. சில சமயங்களில் குளோரபிலின் அளவு குறைக்கப்படுகின்றது. குறைக்கப்படும் முறைகளாவன
    1. கனியுப்புகளின் (அயன்களின் குறைபாடு – N,Mg,Fe,K)
    2. ஒளிச்செறிவு இல்லாமை – குளோரபில் உற்பத்திக்கு ஒளிச்செறிவு அவசியம்
    3. சில நோய்கள் – வைரஸ்
    4. வயதாதல்
  • இலைகளில் குளோரபில் குறைவடைதல் இலையை மஞ்சள் நிறமாக மாற்றமடையச் செய்யும். இவ் இலை வெண்பச்சை இலை எனப்படும்.

வெளிவிடப்படும் O2 வாயுவின் அளவைக் கொண்டு நீர்த் தாவரத்தின் ஒளித்தொகுப்பு வீதத்தைத் துணிதல் (Audus கருவியை பயன்படுத்தி)

  • நீர்த் தாவரம் ஐதரில்லா / இலோடியா தேர்ந்தெடுக்கப்பட்டு 5cm நீளம் இலைகளைக் கொண்ட கிளை ஒன்று நீருக்கு அடியில் வைத்து வெட்டப்பட்டு வெட்டப்பட்ட பகுதி நீருக்கு மேல் இருக்குமாறு அதன் வாழிடநீர் கொண்ட பரிசோதனைக் குழாயினுள் வைக்கப்பட்டு கருவியுடன் பொருத்தப்படும்.
  • பொருத்துவதற்கு முன்பாக Audus கருவி முற்றாக நீரினால் நிரப்பப்படும். புகுத்தி உள்நோக்கித் தள்ளப்பட்டுக் காணப்பட வேண்டும் பரிசோதனைக் குழாய் நீரினுள்,
  1. NaHCO3 சிறிதளவு கரைக்கப்பட வேண்டும் → CO2 செறிவை அதிகரிக்க.
  2. வளியூட்டம் செய்யப்பட வேண்டும் → அவ் நீரை O2 ஆல் நிரம்பலடையச் செய்து தண்டிலிருந்து வெளிவரும் O2 அந்நீரில் கரைவதைத் தடுப்பதற்காக.
  3. ஒன்று / இரண்டு துளி சவர்க்காரநீர் சேர்க்க வேண்டும் – வெளியேறும் O2 குமிழ்கள் கண்ணாடியினுள் ஒட்டுவதைத் தடுப்பதற்கு
  • குறித்த நேரத்தில் சேகரிக்கப்படும் O2 வாயுக்குமிழ்கள் புகுத்தி இழுக்கப்படுவதன் மூலம் அளவிடைக்குக் கொண்டுவரப்பட்டு அதன் நீளம் அறியப்படும்.
    அக்குறித்த நேரம் t ஆகவும் சேகரிக்கப்பட்ட நீளம் l ஆகவும் இருப்பின்,
  • ஒளித்தொகுப்பு வீதம் = l/t
  • இப்பரிசோதனை அமைப்பை ஒளித்தொகுப்பைப் பாதிக்கும் புறக்காரணிகள் எவ்வாறு பாதிக்கின்றன என்பதை அறிந்து கொள்ளவும் பயன்படுத்தலாம். (உ – ம்)
    1. CO2 செறிவின் பாதிப்பு எனில் கரைக்கப்படும் NaHCO3 இன் அளவுகள் அதிகரிக்கப்பட்டு வெவ்வேறு அளவுகளில் சேகரிக்கப்படும் வாயு நிரலின் நீளங்கள் அறியப்படும்.
    2. வெப்பநிலை எனில் நீர் கொண்ட முகவையை வெவ்வேறு வெப்பநிலையில் பேணி நீளங்கள் அறியப்படும்.
    3. ஒளிச்செறிவு எனில் இப்பரிசோதனை அமைப்பு இருட்டறையில் மேற்கொள்ளப்பட்டு மின்குமிழ்களின் எண்ணிக்கையை மாற்றுவதன் மூலம் / குறித்த மின்குழிழ்களின் எண்ணிக்கையைப் பயன்படுத்தி அவற்றின் தூரங்களை மாற்றுவதன் மூலம் ஒளிச்செறிவை மாற்றி நிரலின் நீளங்கள் அறியப்படும்.
RATE CONTENT 0, 0
QBANK (8 QUESTIONS)

C4 தாவரங்களில் வளிமண்டல CO2 பதித்தலில் ஈடுபடுவது பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 3655
Hide Comments(0)

Leave a Reply

zea mays , இனது இலைகள் தொடர்பாகப் பின்வருவன வற்றுள் தவறானது எது?

Review Topic
QID: 3590
Hide Comments(0)

Leave a Reply

தாவரங்களின் ஒளிச்சுவாசத்தில் ஈடுபடும் புன்னங்கம் / புன்னங்கங்கள் பின்வருவனவற்றுள் எது / எவை ?

Review Topic
QID: 3658
Hide Comments(0)

Leave a Reply

C4 தாவரங்களில் வளிமண்டல CO2 பதித்தலில் ஈடுபடுவது பின்வருவனவற்றுள் எது?

Review Topic
QID: 3655

zea mays , இனது இலைகள் தொடர்பாகப் பின்வருவன வற்றுள் தவறானது எது?

Review Topic
QID: 3590

தாவரங்களின் ஒளிச்சுவாசத்தில் ஈடுபடும் புன்னங்கம் / புன்னங்கங்கள் பின்வருவனவற்றுள் எது / எவை ?

Review Topic
QID: 3658
Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank