வரையறுக்கப்பட்ட நிலப்பரப்பு, மக்கள்தொகை, அரசாங்கம், இறைமை இந்நான்கு பண்புகளும் இணைந்த ஒரு ஒழுங்கமைப்பைக் குறிக்கவே அரசு என்ற பதம் பயன்படுத்தப்படுகிறது.
இவற்றுள் ஏதாவது ஒன்று இல்லாவிட்டாலும் அரசு என்ற பதம் உருவாகமுடியாது.
சர்வதேச அங்கீகாரம் என்ற அம்சமும் இன்றைய அரசுகளை அரசாக இனம்காண்பதற்கான அடிப்படையாகக் கொள்ளப்படுகின்றது.
இதனைத் தவிர நாணயஅலகு, அரசியலமைப்பு, முத்திரை என்பவற்றையும் குறிப்பிடலாம்.
வரையறுக்கப்பட்ட நிலப்பரப்பு
அரசொன்றின் நிலப்பேற்றுக்கு எல்லை வரையறுக்கப்பட்ட நிலப்பரப்பு அவசியமானதாகும். இதனூடாகவே அங்கு வாழ்கின்ற மக்கள் அரசின் எல்லையை உறுதி செய்து கொள்வார்கள்.
வரையறுக்கப்பட்ட நிலப்பரப்பு என்பது நாட்டின் எல்லைக்குட்பட்ட தரைப்பிரதேசம் அதற்குரிய கடற்பரப்பு, ஆகாயம் என்பன உள்ளடக்கிய சகல விடயங்களையும் உள்ளடக்கியது.
இந்நிலப்பரப்பு அளவில் சீனா, இந்தியா, ரஷ்யா போன்ற பாரியளவு நிலப்பரப்பு கொண்டுள்ள நாடுகளையும் வத்திக்கான், நவுறு போன்ற மிகக்குறைந்தளவிலான நிலப்பகுதியைக் கொண்ட அரசுகளையும் காணக்கூடியதாக இருக்கின்றது.
மக்கள் தொகை
மக்கள் இல்லாத நிலப்பரப்புக்களை அரசு என்று கூறுவதில்லை.
அரசு என்பது மக்களின் நலனுக்காக அமைக்கப்பட்ட ஒரு மானுட ஒழுங்கமைப்பு எனின் மக்களின்றி அரசு ஒன்று தோன்றவோ, தொழிற்படவோ முடியாது.
அம்மக்கள் தொகை இவ்வளவு இருக்கவேண்டும் என்ற வரையறை இல்லை. நடைமுறையில் சீனா, இந்தியா போன்ற அதிகமான சனத்தொகையையும் கொண்ட நாடுகளும் வத்திக்கான், நவுறு,சென்மரினோ, மனாக்கா போன்ற மிகக்குறைந்த சனத்தொகையைக் கொண்ட நாடுகளும் காணப்படுகின்றன.
அரிஸ்டோட்டில் கிரேக்ககால நகர அரசுக்கு பொருந்தும் வகையில் “ஒரு நாட்டில் சனத்தொகை பத்தாகவும் இருக்கக்கூடாது, பத்தாயிரமாகவும் இருக்கக்கூடாது” என்று குறிப்பிட்டார்.
அரசாங்கம்
அரசின் விருப்பங்களை நடைமுறையில் செயற்படுத்துவது அரசாங்கமே ஆகும். இதனாலேயே அரசாங்கம் “அரசின் முகவர்” “அரசின் கருவி” என்றெல்லாம் சிறப்பிக்கப்படுகின்றது.
அரசின் இறைமை அதிகாரத்தை நடைமுறைப்படுத்தும் உரிமையைப் பெற்றுள்ளதோடு அரசுக்குள் சட்டத்தையும், ஒழுங்கையும், பாதுகாப்பையும் குடிமக்களை ஒரு நோக்கத்தின் பால் நெறிப்படுத்துவது அரசாங்கமாகும்.
தெளிவில்லாமல் இருக்கின்ற ஓர் அரசுக்கு உருவம் கொடுப்பதாக இவ்வரசாங்கம் அமைகிறது.
ஒவ்வொரு அரசாங்கமும் மூன்று விதமான பணிகளை மேற்கொள்கின்றன. சட்டமியற்றுதல், நீதிபரிபாலனம் செய்தல், நிர்வகித்தல் என்பனவே அம்மூன்று பணிகளுமாகும்.
இறைமை
ஒரு அரசானது தனது நிலப்பரப்பிற்குள் கொண்டுள்ள முழுநிறைவானதும் முடிவானதுமான சட்டரீதியான அதிகாரமே இறைமை ஆகும்.
இவ்இறைமை அதிகாரத்தைப் பயன்படுத்தியே அரசு சட்டங்களை இயற்றுவதோடு அச்சட்டங்களுக்கான மக்களின் அடிபணிவையும் பெற்றுக் கொள்கின்றது.
உள்இறைமை என்பது உள்நாட்டில் குறிப்பிட்ட அரசிற்கு சமமான வேறு எந்த ஓர் அதிகார நிறுவனமும் இருக்கமுடியாது என்பதைக் குறிக்கின்றது.
வெளி இறைமையானது ஒரு அரசு வெளிநாட்டு சக்தியின் கட்டுப்பாடு இன்றி சுதந்திரமாகவும் தன்னாதிக்கத்துடனும் சர்வதேச சமூகத்தில் மேலான அதிகாரத்துடன் செயற்படுவதாகும்.
அரசு ஒன்றிற்கு உள்நாட்டில் உயர்ந்த ஸ்தானத்தையும் வெளிநாடுகளில் சமநிலையையும் வழங்குவதால் இறைமை என்பது அரசின் இன்றிமையாத ஒரு மூலக்கூறாகின்றது.
உள்இறைமைக்கு அமுக்கக்குழுக்களும், வெளிஇறைமைக்கு வல்லரசுகளும் தடையாக உள்ளது.
சர்வதேச அங்கீகாரம்
சர்வதேச அங்கீகாரம் என்பது ஒரு அரசை ஏனைய அரசுகள் ஏற்றுக்கொள்வதாகும்.
சர்வதேச அங்கீகாரம் எனும் விடயம் அரசு என ஓர் அரசியல் அலகை இனங்காண்பது தொடர்பான சர்வதேச ஒருமைப்பாடு “மொண்டிவீடியோ” எனும் ஒப்பந்தம் மூலம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
வர்த்தகம், பொருளாதாரம், கலாசார பரிவர்த்தனைகள் என்பவற்றிற்கு இவ்வங்கீகாரம் மிக மிக அவசியமானதாகும்.
பிறநாடுகளின் அங்கீகாரம் இல்லாமல் ஒரு அரசு தொடர்ச்சியாக நிலைபெறுவதும் கடினமாகும். உதாரணம் : றொடீசியாவில் (சிம்பாப்வே) “அயன்சிமித்தின்” அரசாங்கத்தை உலகநாடுகள் அங்கீகரிக்காததினால் தொடர்ச்சியாக நிலைபெறமுடியவில்லை.
நவீன காலங்களில் பிறநாடுகளின் அங்கீகாரம் என்பது வளர்ச்சியடைந்த நாடுகளின் கைகளிலேயே தங்கியிருக்கின்றது.
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்