அரசியலுக்கும் ஏனைய சமூக விஞ்ஞானங்களுக்கும் இடையிலான தொடர்பு
1. அரசியலும் வரலாறும்
வரலாறு என்பது கடந்தகால நிகழ்வுகளின் பதிவுகளாகும். அதாவது ஒரு நிகழ்ச்சி எப்போது, எவ்வாறு, எப்படி நடந்தது என்பதை கூறுவது வரலாறு ஆகும்.
அரசியலில் பல பிரச்சினைகள், கருத்துக்கள் பற்றி விவாதிக்கப்படும் போது அவை தோன்றிய விதம், வளர்ச்சி ஆகியனவும் கருத்தில் கொள்ளப்படும். மறுபுறமாக வரலாறு கடந்தகால நிகழ்ச்சிகள், இயக்கங்கள், புரட்சிகள் வளர்ந்த முறையை தெரிவிக்கின்றது. இவ்வாறு அரசியலும் வரலாறும் ஒன்றுக்கொன்று பங்களிப்பதுடன் அரசறிவியலின் பரிசோதனைக் கூடமாகவும் நூல்நிலையமாகவும் காணப்படுகின்றது.
கிரேக்கம் பற்றிய வரலாற்று அறிவின்றி பிளேட்டோ, அரிஸ்டோட்டில் ஆகியோரின் கோட்பாடுகளை விளங்கிக் கொள்ள முடியாது.
அது மட்டுமன்றி ஹொப்ஸ், லொக் போன்றோரின் கோட்பாடுகளை விளங்கிக் கொள்ள 17ம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் நடைபெற்ற இரத்தம் சிந்தாப் புரட்சி பற்றி விளங்கிக் கொள்ள வேண்டும். இவ்வாறு அரசியலும் வரலாறும் ஒன்றுக்கொன்று பங்களிப்பதுடன் ஒன்றையொன்று முழுமைப்படுத்துகின்றன.
ஜோன்சீலி அரசியல் இல்லாத வரலாறு பயனற்றது என்றும் வரலாறு இல்லாத அரசியல் வேரற்றது என்றும் கூறுகிறார்.
லீகொக் வரலாறு இன்றி அரசறிவியல் சாத்தியமற்றது. அரசறிவியல் இன்றி வரலாறு தனது சிறப்பை இழந்து விடுகிறது என்று கூறுகிறார்.
கார்ணர் அரசியலுக்கும் வரலாற்றுக்கும் இடையிலான தொடர்பு பற்றிக் கூறும் போது இரத்தத்திற்கும் தசைக்குமான தொடர்பாகக் கூறியுள்ளார்.
2. அரசியலும் பொருளியலும்
கடந்த காலத்தில் பொருளியல் அரசறிவியலின் ஒரு கிளையாகவே கருதப்பட்டது. தற்போது அரசியலும் பொருளியலும் தனித்தன்மை வாய்ந்த பாடங்களாக இருக்கின்ற போதிலும் இவை இரண்டிற்குமிடையே தொடர்பு காணப்படுகின்றது.
கார்ள்மார்க்ஸ் போன்ற அரசியல் அறிஞர்கள் பொருளாதாரத்தையும் அரசியலையும் இணைந்த வகையிலேயே தமது கருத்துக்களை முன்வைத்தனர்.
அதாவது அரசுகளை தாராண்மைவாத அரசு மற்றும் சோசஸிச அரசு என்று வகைப்படுத்துவது பொருளியல் காரணியின் அடிப்படையிலேயாகும்.
எந்தவொரு அரசுக்கும் பொருளாதார கொள்கை என்பது இன்றியமையாதது. பொதுக் கொள்கைகளை உருவாக்கவும், சர்வதேச உறவுகளை பேணவும் பொருளியல் என்ற அம்சம் மிகவும் அவசியமான ஒன்றாகவுள்ளது.
மறுபுறமாக ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மையமாகக் கொண்டு அந்நாடுகளை வகைப்படுத்தலாம். குறிப்பாக பொருளாதார வளர்ச்சியில் உச்சநிலை அடைந்திருக்கும் நாடுகள் வடக்கு நாடுகள் அல்லது செல்வந்த நாடுகள் எனவும் ஓரளவு பொருளாதார வளர்ச்சியடைந்த நாடுகள் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகள் எனவும் பொருளாதாரத்திலே பின்தங்கிய நிலையிலுள்ள நாடுகள் குறை விருத்தி நாடுகள் எனவும் வரையறுக்கப்படுகின்றன.
3. அரசியலும் புவியியலும்
அரசு என்ற அமைப்பு நிலப்பரப்பு என்ற புவியியல் அம்சம் இல்லாமல் தோன்றவோ தொழிற்படவோ முடியாது. அரசு ஒன்றின் இயல்பு, செயற்றிறன் என்பவற்றை புவியியல் தன்மை தீர்மானிக்கிறது என அரசியல் சிந்தனையாளர்கள் கருதுகின்றனர்.
மொண்டஸ்கியு “ஒரு நாட்டின் பௌதீகத் தன்மை அரசாங்கங்களின் வடிவத்தில் செல்வாக்குச் செலுத்துகின்றது” எனக் கூறிகின்றார். ஐரோப்பிய அரசுகள், மத்திய கிழக்கு அரசுகள், தென்னாசிய அரசுகள் என்ற அரசுகளின் வகைப்படுத்தல் புவியியலை மையமாகக் கொண்டே இடம்பெறுகின்றன.
மிகச்சிறிய நிலப்பரப்பைக் கொண்டிருக்கும் அரசுகள் ஒற்றையாட்சி அரசாங்க முறைமையைத் தெரிவு செய்கின்றன. அதேபோன்று மலைகளால், ஆறுகளால், கடல்களால் துண்டாடப்படும் நிலத்திணிவுகளைக் கொண்டிருக்கும் அரசுகள் சமஷ்டி ஆட்சி முறைமையைத் தெரிவு செய்கின்றன.
அரசியலுக்கும் புவியியலுக்கும் இடையிலான நெருங்கிய தொடர்பு பிற்பட்ட காலத்தில் “அரசியல் புவியியல்”,“புவிசார் அரசியல்” எனும் உட்பிரிவுகள் தோன்றவும் காரணமாயின.
4.அரசியலும் சட்டவியலும்
சட்டவியலானது சட்டத்தினைப் பற்றியும் சட்டத்துடன் தொடர்புபட்ட எண்ணக்கருக்களைப் பற்றியும் விரிவாக ஆராய்கின்றது.
அரசறிவியலுக்கும் சட்டவியலுக்குமான தொடர்பு மிகவும் இறுக்கமானதாகும். ஏனெனில் அரசியல் பாடப்பரப்பிலே ஒரு அலகாக சட்டம் என்பது அமைகின்றது.
அரசிற்கு மையமாக இருப்பது சட்டங்களாகும். சட்டத்தின் உருவாக்கம் அமுலாக்கம் வரைக்குமான சகல செயற்பாடுகளையும் மேற்கொள்வது அரசின் நடைமுறை கரமான அரசாங்கம் என்ற அமைப்பாகும்.
அரசாங்கத்தின் முத்துறைகளான சட்டத்துறை – சட்டத்தை இயற்றுகின்றது, நிர்வாகத்துறை – அதனை அமுல்படுத்துகின்றது, நீதித்துறை – சட்டம் பின்பற்றப்படுகின்றதா? அல்லது மீறப்படுகின்றதா? என்பதை கவனிக்கிறது.
இதனைத் தவிர சட்டவியல் மூலம் மேற்கொள்ளப்படும் ஆய்வு முடிவுகள் அரசியல் ஆய்வுகளுக்கு உதவுகின்றது.
எனினும் சட்டவியல் அரசியலின் ஒரு பகுதியாக அமைவதால் முழுமைக்கும் பகுதிக்குமிடையிலான தொடர்பை அவை பெறுகின்றன.
5.அரசியலும் உளவியலும்
அரசறிவியல் சடப்பொருட்களைப் பற்றி ஆராய்கின்ற ஒன்றல்ல. மாறாக மனிதனின் அரசியல் நடத்தை பற்றி ஆராய்கின்ற ஒன்றாகும். இதனாலேயே அரசறிவியலுக்கும் உளவியலுக்குமிடையில் நெருக்கமான தொடர்பு காணப்படுகிறது.
மனிதன் ஓர் அரசியல் விலங்கு என அரிஸ்டோட்டில் கூறியமையும் இக்காரணத்தின் அடிப்படையிலேயே ஆகும்.
ஒவ்வொரு நாட்டு மக்களும் தங்களுடைய எண்ணங்களுக்கும் விருப்பங்களுக்கும் ஏற்பவே அரசாங்கங்களை உருவாக்கிக் கொள்கின்றனர். இதற்கு அரசுகள் மறுக்கின்ற போதே அவை போராட்டங்களாகவும், புரட்சிகளாகவும் வளர்கின்றன.
கட்சிகளின் கொள்கைகளைத் தீர்மானிப்பதிலிருந்து அரசாங்கத்தின் கொள்கைகளைத் தீர்மானிப்பது வரை அரசியலில் உளவியலின் செல்வாக்கு காணப்படுகிறது.
சில வளர்ச்சியடைந்த நாடுகளில் அரசாங்க நிர்வாகத்துக்கு ஆட்களைத் தேர்ந்தெடுப்பதில் கூட உளவியல் சோதனைகள் நடாத்தப்படுகின்றன.
நவீன அரசியல் தனிப்பட்ட மனித உளவியலுக்கு மட்டுமல்ல சமூக உளவியலுக்கும் முக்கியத்துவம் கொடுக்கின்ற ஒன்றாக உள்ளது.
‘மற்றைய பல சமூக விஞ்ஞானங்களோடு அரசியல் விஞ்ஞானம் நெருங்கிய தொடர்புடையது” இம் மற்றைய சமூக விஞ்ஞானங்களை தரும் சரியான சேர்மானங்களை இனங் காண்க.
Review Topicஅரசறிவியலோடு நெருக்கமாகத் தொடர்புபடும் ஏனைய சமூக விஞ்ஞானங்களின் சரியான வரிசையைத் தெரிவு செய்க.
Review Topic‘மற்றைய பல சமூக விஞ்ஞானங்களோடு அரசியல் விஞ்ஞானம் நெருங்கிய தொடர்புடையது” இம் மற்றைய சமூக விஞ்ஞானங்களை தரும் சரியான சேர்மானங்களை இனங் காண்க.
Review Topicஅரசறிவியலோடு நெருக்கமாகத் தொடர்புபடும் ஏனைய சமூக விஞ்ஞானங்களின் சரியான வரிசையைத் தெரிவு செய்க.
Review Topic
அரசியல் விஞ்ஞானம் ஓர் அறிவியல் கற்கையாக எவ்வாறு படிப்படியாக வளர்ச்சியடைந்து வந்தது???