Please Login to view full dashboard.

மின்பகுப்பு

Author : Admin

0  
Topic updated on 02/14/2019 06:26am

உருகிய  அல்லது  பொருத்தமான  கரைப்பானில்  கரைக்கப்பட்ட  பதார்த்தமொன்றின்  ஊடாக நேர்மின்னோட்டத்தைச்  செலுத்தும்போது  மின்வாய்களில்  இரசாயனத்தாக்கங்களை விளைவாக்கி கலவையை  பிரிக்கும்  செயற்பாடு  மின்பகுப்பு  எனப்படும்.

  • நேர் மின்வாய் : மின்கலத்தின் நேர் முனைவுக்கு இணைக்கப்பட்ட மின்வாய் நேர் மின்வாய் ஆகும். இதுவே, அனோட்டு ஆகும். அனோட்டில் எப்போதும் ஒட்சியேற்றமே நிகழும்.
  • எதிர் மின்வாய் : மின்கலத்தின் மறை முனைவுக்கு இணைக்கப்பட்ட மின்வாய் எதிர் மின்வாய் ஆகும். இதுவே, கதோட்டு ஆகும். கதோட்டில் எப்போதும் தாழ்த்தலே நிகழும்.
  • மின்பகுப்பின் போது கற்றயன்கள் கதோட்டிலும் அன்னயன்கள் அனோட்டிலும் இறக்கமடையும்.
  • மின்பகுப்பின் விளைவுகளை தீர்மானிக்கும் காரணிகள்,
    • இறக்க அழுத்தம்
    • மின்வாயின் தன்மை
    • கரைசலிலுள்ள அயன்களின் செறிவு
  • இறக்க அழுத்தம்
    • குறித்தவொரு அயனை மூலகமாக / எளிய மூலக்கூறாக இறக்கடையச் செய்வதற்கு பிரயோகிக்க வேண்டிய ஆகக் குறைந்த  அழுத்தவேறுபாடு  ” இறக்க அழுத்தம் ” ஆகும்.
  • மின்வாயின் தன்மை
    • அனோட்டாக  C / Pt  மின்வாய்  பயன்படுத்தப்பட்டால்  இறக்க அழுத்தம்  குறைந்த அன்னயன்கள்  இறக்கமடையும்.  அனோட்டாக  C / Pt  தவிர்ந்த  வேறு  ஏதாவது  உலோகம்  பயன்படுத்தப்பட்டால் அனோட்டு கரையும்.
    • கதோட்டாக  Hg  தவிர்ந்த  வேறு  ஏதாவது  மூலகம்  பயன்படுத்தப்பட்டால்  கதோட்டில் இறக்க அழுத்தம்  குறைந்த கற்றயன்கள் முதலில் இறக்கமடையும். ஆனால் கதோட்டாக Hg  பயன்படுத்தப்பட்டால்  இறக்க அழுத்தம்  கூடிய கற்றயன்களே  முதலில் இறக்கமடையும்.
  • கரைசலிலுள்ள அயன்களின் செறிவு
    • கரைசலிலுள்ள கற்றயன்களின் செறிவு
      • சம செறிவுடைய  Zn2+, Cu2+  அயன்கள்  உள்ள  போது  இறக்க அழுத்தம்  குறைந்த Cu2+ அயன்களே  முதலில் இறக்கமடையும்.  ஆனால் Zn2+ இன்  செறிவு  உயர்வாக  உள்ள போது  Zn2+, Cu2+  இரண்டும்  ஒரே நேரத்தில்  இறக்கமடையும். இம்முறையை பயன்படுத்தியே  கலப்புலோகங்கள்  தயாரிக்கப்படும்.
    • கரைசலிலுள்ள அன்னயன்களின் செறிவு
      • ஒரு  கரைசலில்  சம செறிவுடைய  Cl, OH அயன்கள்  இருப்பின்  இறக்க  அழுத்தம் குறைந்த  OH  அயன்களே முதலில் இறக்கமடையும்.  ஆனால்  OH  இன் செறிவு குறைவாகவும்  Cl  இன் செறிவு  கூடவாகவும்  இருப்பின்  Cl அயனே முதலில் இறக்கமடையும்.

மின்பகுப்பின்  பிரயோகங்கள்

  • மின்முலாமிடல்.
  • தூய உலோகங்களை  பிரித்தெடுத்தல்.
  • பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த  இரசாயன பொருள்களின் தயாரிப்பு. – NaOH, Na, Cl2

 

மின்பகுப்பின் தத்துவங்கள்
  • ஒவ்வொரு  மின்வாயிலும்  ஒரு அயன்  இலத்திரன் அரைத்தாக்கம் நடைபெறும்.  இங்கு      நிகர தாக்கம் ஒரு  தாழ்த்தேற்று தாக்கமாகும்.
  • ஒட்சியேற்றம் நடைபெறும் முனை அனோட்டு. தாழ்த்தல் நடைபெறும் முனை கதோட்டு.
  • மின்னை வழங்கும் மின்முதலின் நேர்முனைவுடன் தொடுக்கப்பட்ட மின்வாய், நேர்மின்வாய். எதிர்முனைவுடன் தொடுக்கப்பட்ட மின்வாய், எதிர்மின்வாய்.
  • கரைசலில்  உள்ள  நேரயன்களாவன எதிர்மின்வாயால் கவரப்படும். எதிரயன்களாவன நேர்மின்வாயால் கவரப்படும்.
  • குறித்த நிபந்தனைகளின் கீழ் பொருத்தமான அயன்களின் முன்னுரிமைக்கேற்ப ஊடகத்தில் உள்ள வேறுபட்ட இனங்களாவன ஒட்சியேற்றப்படவோ தாழ்த்தப்படவோ முடியும்.
  • நீரை மின்பகுத்தல். (அமிலம் துமிக்கப்பட்ட / மூலம் துமிக்கப்பட்ட)
    • அனோட்டில் :  2H2O(l)  →  O2(g) + 4H+(aq) + 4e
    • கதோட்டில் :  2H2O(l) + 2e  →  H2(g) + 2OH(aq)
  • செப்பு  மின்வாய்களைப்ப யன்படுத்தி  CuSO4  நீர்க்கரைசலை  மின்பகுத்தல்.
    • அனோட்டில் :  Cu(s)  →  Cu2+(aq) + 2e
    • கதோட்டில் :  Cu2+(aq) + 2e  → Cu(s)
  • பிளாற்றினம்  மின்வாய்களைப்  பயன்படுத்தி  CuSO4  நீர்க்கரைசலை மின்பகுத்தல்.
    • அனோட்டில் : 2H2O(l)  → O2(g) + 4H+(aq)+ 4e
    • கதோட்டில் : Cu2+(aq) + 2e →  Cu(s)
பரடேயின் மின்பகுப்பு விதிகள்

விதி – 1  

மின்பகுப்பினால் உருவாக்கப்படும் பதார்த்தத்தின் திணிவானது செலுத்தப்படும் மின்னோட்டத்தின் அளவுக்கு நேர்விகித சமன்.

  • இங்கு படிவாகும்  அல்லது  விடுவிக்கப்படும் பதார்த்தத்தின் திணிவானது மின்பகுபொருளின் வெப்பநிலை, செறிவு, மின்வாய்களின் பருமன் என்பவற்றில் தங்கியிராது.
  • செலுத்தப்பட்ட மின்கணியத்தில் மட்டுமே தங்கியிருக்கும். (மின்னோட்டம், நேரம் என்பவற்றில் மாத்திரம் தங்கியிருக்கும்)

மின்னிரசாயனச்  சமவலு [e]

  • மின்பகுபொருள் கரைசலொன்றினூடாக ஒரு கூலோம் மின்கணியத்தை செலுத்தும் போது மின்வாயொன்றில் படிவாகும் அல்லது  விடுவிக்கப்படும்  திணிவாகும்.

இரசாயனச் சமவலு / சமவலு திணிவு

  • மின்பகுபொருள் கரைலொன்றினூடாக 1 பரடே (96500C) மின்கணியம் செலுத்தப்படும் போது படிவாகும் / விடுவிக்கப்படும் பதார்த்தத்தின் திணிவு, அப்பதார்த்தத்தின் இரசாயன சமவலு / சமவலு திணிவு  எனப்படும்.

♦  உலோகக் கற்றயன்களுக்கு ஏற்றம் வலுவளவாகும். (இழக்கின்ற / ஏற்கின்ற en களின் எண்ணிக்கை)

1 F மின்கணியத்தை செலுத்தும் போது படிவாகும் திணிவு = E

1 C மின்கணியத்தை செலுத்தும் போது படிவாகும் திணிவு = E/F

 விதி – 2

ஒரு மூல் பதார்த்தத்தை தாழ்த்துவதற்குத் தேவையான மின்னோட்டத்தின் அளவு கூலோம்களில் 96,500 இன் எளிய முழு எண் மடங்குகளாகும்.

பரடேயின் மாறிலி (F) = புரோத்தன் ஒன்றின் மூலர் ஏற்றம்
= 1.602 x 10-19 C x 6.022 x 1023 mol-1
= 96 484 C mol-1
= 96 500 C mol-1

மின்முலாமிடல்
  • மின்முலாமிடல் என்பது மின்னோட்டத்தைப் பயன்படுத்தி ஒரு உலோகத்தை இன்னொரு உலோகத்தினால் மேற்பரப்புப் படலமிடல் ஆகும். இது தாக்கம் கூடிய உலோகம் ஒன்றின் மேல் தாக்கம் குறைந்த உலோகமொன்று படிவடைதலை விட வேறுபட்டது.
  • மின்முலாமிடலின்  போது முலாமிட  வேண்டிய பொருள் கதோட்டிலும்  முலாமிடும் உலோகம் அனோட்டிலும் இருக்கும்.
  • மின்பகுப்பின்போது   தரமான  மேற்பரப்புப் படலமிடலைப் பெறுவதற்கு உலோகத்துடன் படலம் இறுக்கமாகப் பிணைந்திருக்க வேண்டும்.
  • அத்துடன்  அது பின்வரும் பண்புகளைக் கொண்டிருக்க வேண்டும்.
    • உறுதி
    • மினுமினுப்பு
    • இரசாயன சடத்துவத் தன்மை
    • சிறந்த பொறியியல் பண்புகள்
    • சீரான தடிப்பும் தோற்றமும்
    • வெடிப்புகள், துளைகள் அற்ற தன்மை
  • ஒரு  சிறந்த  மேற்பரப்புப் படலமிடலை பெறுவதற்கு பின்வரும்  காரணிகள்  பொருத்தமான வகையில் கட்டுப்படுத்தப்பட  வேண்டும்.
    • மின்பகுபொருளின் தன்மையும் தூய்மையும்
    • வெப்பநிலை
    • அழுத்த வித்தியாசம்
    • அனோட்டினதும் கதோட்டினதும் தொடர்பான நிலை
    • அயன்களின் செறிவு
    • அனோட்டின் தூய்மை
    • காணப்படும் ஏனைய அயன்களின் தன்மை
    • மின்னோட்ட அடர்த்தி
    • பொருளின் தூய்மையும் அதன் மேற்பரப்பின் தன்மையும்
    • pH பெறுமானம்
  • மின்வாய்களில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தாக்கங்களும் ஒரே நேரத்தில் நிகழலாம். அவற்றை வெப்பநிலை, செறிவு, அழுத்தம், மின்வாய்களின் தன்மை என்பவற்றினை மாற்றுவதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.
RATE CONTENT 0, 0
QBANK (0 QUESTIONS)
Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank