Please Login to view full dashboard.

மண்வளமும் திண்மகழிவுகளும்

Author : Admin

0  
Topic updated on 02/14/2019 09:26am

இயற்கை உள்ளீடுகளும் மண்வளமும்

  • புவியானது இயற்கை முதலீட்டின் வளமாகும். இது அத்தியாவசிய உலோகங்கள், எரிபொருள் , தாவர போசணை போன்றவற்றின் முதலீடாக விளங்குகின்றது.
  • இந்த புவி முதல்களானது பல்வேறு இயற்கை மற்றும் மனித செயற்பாடுகளின் போது பயன்படுத்தப்படுகின்றது.
  • அத்துடன் புவியானது மண் வளத்தை அதிகரிக்கச் செய்யும் கழிவுகளை வளங்கும் ஒன்றாகவும் திகழ்கின்றது.
  • துரதிஷ்டவசமாக உலகமெங்கிலும் மீள்சுழற்சி செயன்முறை சரியான முறையில் பயன்படுத்தப்படாமல் உள்ளது.
  • சில இடங்களில் கழிவுகள் அதிகமாகச் சேகரிக்கப்பட்டு தீங்கான சூழலை உருவாக்குகிறது.
  • கழிவுகள் அதிகமாகச் சேகரிக்கப்பட்ட இடங்களில் இருந்து வெளியேறும் தீங்கான பொருட்களினால் மண் வளம் குறைக்கப்படுவதுடன் வெவ்வேறு உயிரினங்களின் நிலவுகைக்கும் ஆபத்தை ஏற்படுத்தும்.

நிலம் மாசாக்கலின் முதல்கள்

  • வீட்டுக்கழிவு
    • உணவுக்கழிவுகள் , மனிதக் கழிவுகள் , கழிவுநீர் , தோட்டக்கழிவுகள் , பிளாத்திக்கு என்பவற்றை உள்ளடக்கும்.
  • விவசாய இரசாயனப்பொருட்கள்
    •  பீடைகொல்லிகள்
      • பீடைகளை அழிப்பதற்கும் , கட்டுப்படுத்துவதற்கும் , தடைசெய்வதற்கும், எதிர்ப்பதற்கும் துன்பத்தைக் குறைக்கவும் பயன்படுத்தப்படும் பதார்த்தம் பீடைகொல்லி எனப்படும்.
      • பிரதானமாக இரண்டு வகுப்பு பீடைகொல்லிகள் பயன்படுத்தப்படுகின்றது.
        அவையாவன

        • இயற்கை பீடை கொல்லிகள்.
        • தொகுப்பு பீடை கொல்லிகள்.
      • இயற்கை பீடை கொல்லிக்கு Kohamba – Neem சக்திமிக்க சாரம் ஒரு உதாரணமாகும்.
      • உபயோகிக்கப்படும் முக்கிய பீடைகொல்லிகள் இரண்டு வகைப்படும்.
        •  களை கொல்லிகள் (களைகளைக் கொல்லுபவை.)
          பயிர்களுடன் போசணைக்கும் , சூரிய சக்திக்கும் போட்டி போடும் தாவரங்களை கொல்லுபவை.
        • பூச்சி கொல்லிகள்
          பயிர்களைப் பழுதடையச் செய்யும் பூச்சிகளைக் கொல்லுபவை.
      • பூச்சிபீடைகள் விளைச்சலை இரண்டு வழிகளில் பாதிக்கின்றன.அறுவடை செய்யப்படும் தாவரத்தின் பகுதிகளை உண்பவை அல்லது இலைகளை பழுதடையச் செய்வதனால் ஒளித்தொகுப்பு வீதத்தைக் குறைப்பதன் மூலம் உணவு உற்பத்தியைக் குறைப்பவை.
      • பூச்சிகொல்லிகள் அவை தொழிற்படும் முறையின் அடிப்படையில் மூன்று வகைகளாக பிரிக்கப்படுகின்றன.
      • செயற்கை பூச்சி கொல்லிகளின் முக்கிய மூன்று பிரிவுகள்
        • குளோரின் ஏற்றப்பட்ட ஐதரோகாபன் – chlorinated hydrocarbons (DDT இருகுளோரோ இருபீனைல் முக்குளோரோ எதேன்).
        • சேதன பொசுபேற்றுக்கள் – organo phosphorus (உதாரணம் : மெலத்தியன்- melathion)
        • பார உலோக உப்புகள் (உதாரணம் : செம்பு இரு தயோ காபமேற்று -Copper
          dithiocarbomates )

சீரிய பீடை கொல்லிகள் பின்வரும் இயல்புகளைக் கொண்டிருத்தல் வேண்டும்

  1. குறிப்பாக குறித்த பீடையை மாத்திரம் கொல்லும் பீடைகொல்லியாக இருத்தல் வேண்டும்.
  2. சூழலில் அல்லது மண் நீர்த்தொகுதியில் இலகுவாக உயிர்படியிறக்கத்திற்கு உட்பட வேண்டும்.
  3. பீடைகொல்லிக்கு எதிராக பீடைகள் எதிர்ப்புச் சக்தியை விருத்தி செய்யக் கூடாது.
  4. மலிவானதாகவும் மனிதனுக்கு நச்சுத்தன்மை அற்றதாகவும் இருத்தல் வேண்டும்.

பீடை கொல்லிப் பாவனையால் ஏற்படும் பாதகமான விளைவுகள்

  1. பீடைநாசினிகள் எமது உணவுகளில் படிந்து தீங்கை ஏற்படுத்தலாம். இதன் அளவு அதிகமாக இருக்கும் போது அது நஞ்சூட்டிவிடும்.
  2. பிரிகைடையாது உயிரியல் திரட்சியடையும் பீடைகொல்லிகள் , உணவு சங்கிலியினூடாக செறிடைவதால் இதன் மட்டம் ஒரு பில்லியனின் ஆயிரம் பகுதிகளாக அல்லது மில்லியனின் பகுதிகளாக காணப்படும். உதாரணம்: DDT
  3. இது சூழலைப் பாதிக்கின்றது. பூச்சிகளை மாத்திரம் கொல்லாது , மனிதனுக்குத் தீங்கு விளைவிக்காததும் , மனிதனுக்கு உதவும் , நன்மை தரும் உயிரினங்களையும் அழிக்கும்.
  4. ஒரே வகையான பீடை கொல்லிகளை தொடர்ந்து பாவிப்பதால் , எதிர்ப்புத் தன்மையுள்ள பீடைகள் தோன்றும். இயற்கை தேர்வின் மூலம் எதிர்ப்புத் தன்மை கொண்ட பீடைகள் அதிரிகரிக்கப்படும். இதனால் பீடை கொல்லிகள் வினைத்திறனற்றதாகின்றன. அத்துடன் இயற்கை இரைகௌவிகள் பீடை கொல்லிகளினால் அழிக்கப்படுகின்றன. இது பீடைகளை ஆரம்பத்தில் இருந்ததிலும் பார்க்க விரைவாகப் பெருகச் செய்கின்றது.
  • வளமாக்கிகள்
    •  தாவரங்களின் வளர்ச்சிக்குத் தேவையான கனியுப்புக்களையும் , போசணைப் பதார்த்தங்களையும் வழங்கி அவற்றை விரைவாக வளர்ச்சியடையச் செய்பவை வளமாக்கிகள் எனப்படும். உதாரணம் : NPK
    • மிகவும் முக்கியமான கனியுப்பு அயன்களாகிய நைத்திரேற்று , பொசுப்பேற்று, பொற்றாசியம் பெருமளவிலும் சில சுவட்டு முலகங்கள் சிறிதளவிலும் தாவர வளர்ச்சிக்கு அவசியமாகும்.N%, P2O5% , K2O% என NPK தெரிவிக்கப்படும்.
    • வளமாக்கிகள் இரு முக்கிய வகைகளாக பிரிக்கப்படும். ஒவ்வொன்றும் தன்னகத்தே நன்மைகளை கொண்டுள்ளன.
      • இயற்கை வளமாக்கிகள் சேதனப் பதார்த்தங்களாகும். இது சாக்கடை கழிவுகள், சேறுகள் ஆகியவற்றை உள்ளடக்குகின்றது.
      • செயற்கை வளமாக்கிகள் அசேதனப் பதார்த்தங்களாகும். அவை தூய இரசாயனப் பதார்த்தங்களைக் கொண்டுள்ளன. உதாரணம் : NH4NO3 தூள்களாகவோ சிறு உருண்டைகளாகவோ காணப்படும்.
      • இயற்கை வளமாக்கிகள் பரந்தளவிலான போசணைப் பதார்த்தங்களை கொண்டுள்ளன.மெதுவாகவே போசணைக்கூறுகளை வெளியிடுவதனால் நீண்டகால விளைவை ஏற்படுத்தும். இவை சூழலுக்கு குறைந்தளவு தீங்கை ஏற்படுத்தும். பயிர்ச்செய்கைக்கு உகந்தது. மலிவானவை.
      • மண்ணின் இழைய அமைப்பை விருத்தி செய்யும்.
      • இடத்திற்கு இடம் கொண்டுசெல்லும் செலவீனமும் அதனைப் பிரயோகிப்பதற்கான செலவீனமும் அதிகமானது. அத்துடன் சீரிய போசாக்குச் சமநிலை ஏற்படாமல் போகலாம்.
      • செயற்கை வளமாக்கிகளை இடத்துக்கிடம் கொண்டு செல்லலும் விநியோகமும் இலகுவானது. அத்துடன் தேவைப்படும் கனியுப்பு அயன்களை சேர்த்து இலகுவில் எமது இலக்கை அடைய முடியும்.அத்துடன் சேர்க்கப்படும் கனியங்களின் அளவை செம்மையாக கட்டுப்படுத்த முடியும்.
      • இவற்றின் தொடர்ச்சியான பாவனை காரணமாக மண்ணின் இயற்கை தன்மை அல்லது கட்டமைப்பு பாதிக்கப்படுவதால் மண்ணின் வளம் குன்றும். இலகுவாக கழுவிச் செல்லக் கூடியவை. இதனால் மேற்பரப்பு நீர் நிலைகள் காலப்போக்கில் நற்போசணையாதலுக்கு உட்படும்.
      • இரசாயன வளமாக்கிகளால் நிலக்கீழ் நீரின் தரமும் பாதிப்படையும்.
        உதாரணம் : NO3¯

பார உலோகங்கள்

  • பார உலோகங்கள் குடிநீரில் பரவி நிலத்தை மாசடையச் செய்யும்.
  • பார உலோகங்களை உணவுடன் அல்லது நீருடன் உள்ளெடுப்பதால் பல்வேறு உடற்தீங்குகள் ஏற்படும்.
  • ஈயம் உடலில் கூடுதலான அளவில் சேர்வதால் புத்திக்கூர்மையின் அளவு குறைவடையும்.

e – கழிவு

  • e – கழிவு எனும் பதமானது எல்லா இலத்திரனியல் மின்னியல் கருவிகள் என்பவற்றில் இருந்து உருவாகும் கழிவுகளை இனங்காணப் பயன்படுத்தப்படும். அவற்றில் பின்வருவன உள்ளடக்கப்படும். பாவித்த கணனிகள் , இலத்திரனியல் உபகரணங்கள் கைப்பேசிகள் தொலைக்காட்சிப் பெட்டிகள் , ஒலித்தொகுதிகள் , CFL மின்குமிழ்கள் , மின் / இலத்திரனியல் துணைப்பாகங்கள்.
  • துரித தொழில்நுட்ப மாற்றம் , குறைந்த ஆரம்ப செலவு , கூடிய பாவனைக்காலம் போன்றன e-கழிவுகளால் தோன்றும் பிரச்சினைகளின் அளவை அதிகரித்து நேற்றைய இலத்திரனியல் கனவை இன்றைய சூழல் தாக்கமாக மாற்றமடையச் செய்துள்ளன.
  • e – கழிவுகளிலிருந்து வெளியேறும் தீங்கான இரசாயனப் பொருட்களாவன உலோக ஈயம் , இரசம் , கட்மியம் ,பெரிலியம் , ஆசனிக்கு , பொலிவைனைல் குளோரைட்டுக்கள் , பொலி குளோரீனேற்றம் செய்யப்பட்ட இரு பீனைல்கள்  போன்றனவாகும்.
  • PVC ஐக் கொண்ட e – கழிவுகளை எரிப்பதனால் தீங்கான வாயு விளைவுகள் உருவாகும்.

கழிவு முகாமைத்துவம் (3R முறைமை)

   பாவனையைக் குறைத்தல் , மீளப் பாவித்தல் (Reduce, Reuse)

  • கழிவுகளைக் குறைப்பதற்கான மிகவும் பயனுள்ள முறை அவற்றை உருவாக்காமல் விடுதலாகும். புதிய ஒரு விளைபொருளை உருவாக்குவதற்கு கூடுதலான மூலப்பொருட்களும் சக்தியும் தேவைப்படுகின்றது. மூலப்பொருட்கள் புவியிலிருந்து பிரித்தெடுக்கப்பட வேண்டும். அத்துடன் உருவாக்கும் விளைபொருளானது அது விற்பனை செய்யப்படும் இடத்திற்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும் எனவே இயற்கை மூலப்பொருளைப் பாதுகாக்கவும் , சூழலைப் பாதுகாக்கவும் , பணத்தை மீதப்படுத்தவும் சிறந்த முறைகளாவன பாவனையைக் குறைத்தலும் மீளப்பாவித்தலுமாகும்.
  • வேறு பதார்த்தங்களின் உற்பத்தியில் மூலப்பொருளாக பயன்ப்படுத்துதல்
    • திண்மக் கழிவுகளை வேறு பொருட்கள் தயாரித்தலில் பயன்படுத்தல்.
    • பதனிடும் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் திரவங்களில் உள்ள குரோமியம் Cr(OH)3 ஆக MgO ஐ உபயோகித்து வீழ்படிவாக்கி  மீளவும் பதனிடும் செயன்முறையில் பயன்படுத்தலாம்.
  • சக்தியை பெறுவதற்கான மூலப்பொருட்களாக பயன்படுத்தல்
    • உலர்ந்த கழிவுப் பொருட்களை (குப்பை) எரிபொருட்களாக பயன்படுத்தலாம்.இலங்கையில் கழிவுப் பொருட்களின் 80% சேதனப் பதார்த்தங்களாகும். அவற்றை சக்தி முதல்களாக மாற்றலாம்.      
    • (CHO)n + O2 (g) CO2 (g) + H2O(g) +வெப்பம்
      • தொழிற்சாலைகளில் இவ் வெப்பத்தை பயன்படுத்தலாம்.

மீள் சுழற்சி – Recycling

  • வீசி எறியப்படும் பொருட்களை சேகரித்து புதிய விளைபொருள்களாக மாற்றும் செயன்முறை மீள்சுழற்சி எனப்படும்.
  • இலங்கையின் குப்பை கூளங்களில் 80% இற்கு மேலானது சேதனப் பதார்த்தங்கள் என்பதால் திண்மக் கழிவுகளை மின்னை உற்பத்தி செய்வதற்கான எரிபொருளாக  பயன்படுத்தலாம்.
  • உலோகங்கள் பெறுமதிமிக்க வளங்களாகும். உலோகக் கழிவுகளை வெட்டிப் புதைக்காது அவற்றை சேகரித்து மீள்சுழற்சிக்கு உட்படுத்துதல் மிகவும் நன்று. இது பூமியின் இரும்பு இருக்கைகளை மீதப்படுத்துவதுடன் சக்தி செலவீனத்தையும் மீதப்படுத்தும்.

மீள்சுழற்சி முறையினால் ஏற்படும் நன்மைகள்

  • சக்தி சேமிப்பு.
  • இயற்கை வளங்களின் சேமிப்பு.
  • பாரதீனம் செய்யும் செலவீனத்தை குறைக்கின்றது.
  • உள்நாட்டு அதிகார சபைக்கு ஓர் வருமானமாக அமைகின்றது.

உரமாக்கல் – Composting

  • புதிய தாவரங்களின் உயிர்த்திணிவில் C:N விகிதம் 100:1 ஆகும். திண்ம சேதனப்பதார்த்தங்கள் நுண்அங்கிகளினால் (பக்ரீறியா , பங்கசு) பிரிகைக்கு உட்படும்போது C:N விகிதம் 10:1 ஐ உடைய உக்கல் உண்டாகின்றது.
  • மண்ணில் காணப்படும் சேதனப் பதார்த்தங்களில் C:N விகிதம் மிகவும் உயர்வாக காணப்படுகின்றது. எனவே சேதனப் பதார்த்தங்களை பிரிகையடைச் செய்யும் போசணைப் பதார்த்தங்களை மீள்சுழற்சிக்கு உட்படுத்தும் உயிரினங்களின் வளர்ச்சிக்கு நைதரசன் எல்லைப்படுத்தும் காரணியாக அமையும். C:N விகிதத்தை குறைப்பதற்கு உரமாக்கல் பயன்படுத்தப்படலாம்.
  • வைக்கல் மண்ணுக்கு சேர்க்கப்படும் பொழுது C:N = 80:1 விகிதத்தை குறைப்பதற்காக பொதுவாக நைதரசன் வளமாக்கிகள் சேர்க்கப்படுகின்றது.
  • சேதனப்பதார்த்தங்கள் ஈரலிப்பான நிலையில் வளியில் சேகரித்து வைக்கப்படும் பொழுது நைதரசன் நுண்அங்கிகளில் அமினோஅமிலங்களாகவும் புரதங்களாகவும் சேமிக்கப்படும் வேளையில் காபனீரொட்சைட்டும் , நீரும் வெளியேறுகின்றது.
  • உரத்திற்கு வளமாக்கிகள் சேர்க்கப்படுவதால் நுண்ணங்கிகளின் தொகை அதிகரிக்கப்பட்டு உரமாக்கல் வேகம் அதிகரிக்கின்றது.

உயிர்வாயு உற்பத்தி-Biogas production

  • ஒட்சிசன் அற்ற நிலையில் சேதனப் பதார்த்தங்களை உடைத்து உற்பத்தி செய்யப்படும் ஒரு வாயுவே உயிர்வாயு ஆகும்.
  • இறந்த தாவரங்கள் , விலங்குகள் , விலங்குக்கழிவுகள் , சமையல் அறைக் கழிவுப் பொருட்கள் போன்ற சேதனக் கழிவுகள் என்பன உயிர்வாயு எனப்படும் வாயு எரிபொருளை உருவாக்க பயன்படுத்தப்படும்.
  • உயிர்வாயு உயிர்த் தோற்றுவாயுடைய பொருட்களில் இருந்து உருவாக்கப்படுவதுடன் ஒரு வகையான உயிரியல் எரிபொருள் ஆகும்.
  • காற்றின்றிய சமிபாடு அல்லது நொதித்தலின் மூலம் உயிர்வாயு உற்பத்தி
    செய்யப்படுகின்றது.
  • உயிர்வாயுவில் பிரதானமாக மீதேன் , காபனீரொட்சைட்டு காணப்படுவதுடன் சிறிய அளவில் ஐதரசன் சல்பைட்டு , நீர் போன்றனவும் காணப்படும்.

சாம்பராக்கல்- Incineration

  • ஒட்சியேற்றப்படக் கூடிய பதார்த்தங்கள் பூரண தகனமாவதற்குரிய வெப்பநிலையை சாம்பராக்குவதற்கு உபயோகிக்க வேண்டும்.
  • அப்பொழுது சாம்பல் , கண்ணாடி , உலோகம் மற்றும் பதார்த்தங்கள் எஞ்சியிருக்கும். 770-970ºC வெப்பநிலை இதற்கு உபயோகிக்கப்படும்.
RATE CONTENT 0, 0
QBANK (0 QUESTIONS)
Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank