Please Login to view full dashboard.

தாவர உற்பத்திகள்

Author : Admin

0  
Topic updated on 02/14/2019 06:00am

காகித உற்பத்தி

  • காகித உற்பத்தியில் கடுமையான தாவரப் பதார்த்தங்கள் (Woody Materials) மூலப்பொருட்களாக பயன்படுத்தலாம்.
  • தாவரக் கலச்சுவரின் பிரதான கூறான செலுலோசிலிருந்து கடதாசி தயாரிக்கப்படும்.
  • செலுலோசானது குளுக்கோசின் நேர்கோட்டுப் பல்பகுதியமாகும். செலுலோசு மூலக்கூறுகளின் மூலக்கூற்றுத்திணிவானது 250 000 – 1 000 000 எனும் வீச்சினுள் காணப்படும்.
  • ஒவ்வொரு செலுலோசு மூலக்கூறும் நூற்றுக்கணக்கான OH கூட்டங்களைக் கொண்டிருக்கும்.
  • OH கூட்டங்களுக்கிடையில் ஐதரசன் பிணைப்பு உருவாகச் சந்தர்ப்பம் உள்ளமையின் காரணமாக செலுலோசு மூலக்கூறுகள் ஒன்றுடனொன்று பக்கமாக , நெருக்கமாக இணைந்து செலுலோசு நார்களை உருவாக்கும்.
  • கடதாசியானது இந்த செலுலோசு நார்களை கூட்டமாகக் கொண்ட ஒரு மெல்லிய படையாகும்.
  • தாவரக் கலச்சுவர் சிக்கலான பீனோலிக் பதார்த்தத்தினாலான லிக்னீனையும்உடையது. இது 1 000 – 10 000 மூலக்கூற்றுத்திணிவு வீச்சினை உடையது.லிக்னீனானது கலச்சுவருக்கு உறுதியை வழங்குவதில் முக்கிய பங்களிக்கும்.
  • தாவரப் பதார்த்தங்களிலிருந்து செலுலோசை உருவாக்கும்போது லிக்னீனானது NaOH உடன் வெப்பப்படுத்துவதன் மூலம் அகற்றப்படும்.
  • இதன்போது பெறப்படும் கடுமையான நிறத்தையுடைய திரவமானது கறுப்பு மதுசாரம் “black liquor” என அழைக்கப்படும். காகிதத் தொழிற்சாலைகளில் உருவாகும் பிரதான கழிவு இதுவேயாகும்.
  • லிக்னின் அகற்றலின் போது உருவாகும் காகித கூழ் வெளிற்றும் கருவியொன்றினால் வெளிற்றப்படும்.
  • நிரப்பியாக CaO அல்லது சீனக்களி காகித கூழிற்கு சேர்க்கப்படும். இந்நிலையில் காகிதத்தின் உறுதித் தன்மையை அதிகரிக்க நிறப்பொருட்கள் , வேறு இரசாயனப்பதார்த்தங்கள் சேர்க்கப்படும்.
  • காகிதக் கூழ் உருளைகளினால் அழுத்தப்பட்டு நீர் அகற்றப்படும். இந்நிலையில் தேவைகளுக்கு ஏற்ற தடிப்பில் காகிதங்கள் மெலிதாக்கப்படும்.
  • நீர் அகற்றலை தொடர்ந்து காகிதங்கள் உலர்த்தப்படும்.

சாற்றுத்தைல கைத்தொழில்

  • சாற்றுத்தைலங்களானது குறித்த சில தாவரங்களின் ஆவிப்பறப்புள்ள கூறுகளாகும்.இவை தாம் காணப்படும் தாவரங்களுக்கு சிறப்பான மணத்தைக் கொடுக்கும்.
  • சாற்றுத்தைலங்களானவை சிக்கலான கலவைகளாகும். அத்துடன் அவை ஐதரோகாபன்கள் , அற்ககோல்கள் , கீற்றோன்கள் , அல்டிகைட்டுக்கள் , ஈதர்கள் , எசுத்தர்கள் என்பவற்றையும் கொண்டிருக்கலாம். சாற்றுத்தைலங்களின் பெரும்பாலான கூறுகள் நீரில் கரையும்தகவு குறைந்தவை.
  • சில சாற்றுத்தைலங்கள் ஆகாரத்தை ருசிக்கச் செய்யும் பொருட்களாகப் பயன்படுத்தப்படும். உதாரணம்: கறுவா (cinnamon zeylanicum இன் பட்டை) , மஞ்சள்(curcuma longa  இன் குமிழம்) , மிளகு (piper nigrum இன் பழம்)
  • தாவரங்களிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட சாற்றுத்தைலங்களானது பிரதானமாக உணவுக் கைத்தொழிலிலும் மருந்து தயாரிப்பதிலும் வாசனைத்திரவிய தயாரிப்பிலும் பயன்படும். உதாரணம்: உணவு – சாதிக்காய் எண்ணெய் ( myristica fragrans இன் வித்திலிருந்து) , வாசனைத்திரவியம் – வெட்டிவேர் எண்ணெய்(vetiveria zizanioides இன் வேரிலிருந்து) ,  மருத்துவம் – புதினா (mint) எண்ணெய்(Mentha இன் இலையிலிருந்து)
  • பெரும்பாலான சாற்றுத்தைல எண்ணெய்களானது தாவரப்பகுதிகளிலிருந்து கொதிநீராவி காய்ச்சி வடித்தல் மூலமே பிரித்தெடுக்கப்படுகின்றது. ஏனெனில் இது 100ºC இற்கு கீழ் காய்ச்சி வடிக்கக் கூடியதாக இருக்கும்.

மருத்துவ சேர்வைகளின் தயாரிப்பு

  • தொகுக்கப்பட்ட மருந்துகள் கண்டுபிடிக்கப்பட முன்னர் பல நூற்றாண்டு காலமாகத் தாவரங்களே மருத்துவச் சேர்வைகளின் பிரதான மூலங்களாக இருந்தன.
  • பாரம்பரிய வைத்தியமான ஆயுர்வேதத்தில் தாவரங்களின் சாறுகளானது மருந்தாகப் பயன்படுத்தப்படுகின்றது.
  • நவீன மருத்துவத் தயாரிப்பில் தாவரங்களிலிருந்து எடுக்கப்படும் உயிர்ப்பான சேர்வைகளைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் மருத்துவப் பொருட்களை இரசாயனமருந்தாக விற்பனை செய்கின்றார்கள். சில உதாரணங்கள் கீழே தரப்பட்டுள்ளன.
சேர்வை தாவரமூலம் பயன்பாடு
Vincristine Catharanthus roseus புற்றுநோய் எதிரி
Morphine Papaver somniferum போதை மருந்து,நோவை உணராத தன்மை
Digitoxin Digitalis lanata இருதய செயற்பாடு இழக்கப்படும்போது பயன்படுத்தப்படும் பாணி
Artemisinin Artemisia annua மலேரியா எதிரி
  • இவ்வுயிர்ப்பான சேர்வைகளானது பொதுவாகத் திண்மங்களாகும். இவை தாவரங்களிலிருந்து கரைப்பான் பிரித்தெடுப்பின் மூலம் பிரித்தெடுக்கப்படும்.
  • வேறுபட்ட சேர்வைகள் , வேறுபட்ட கரைப்பான்களில் வேறுபட்ட அளவுகளில் கரையும்.
  • பிரித்தெடுக்கப்பட வேண்டிய சேர்வைகள் உறுதியானவையாயின் பிரித்தெடுப்புச் செயன்முறையானது வெப்பப்படுத்தல் மூலம் ஆர்முடுக்கப்படும்.
  • கரைப்பான் பிரித்தெடுப்பானது சேர்வைகளின் கலவையாகக் காணப்படும்.இதிலிருந்து தேவைப்படும் உயிர்ப்பான சேர்வையானது வேறுபட்ட நுட்பங்களைப் பயன்படுத்தி வேறாக்கப்படும். இதில் ஒன்று நிறம்பகுமியல் ஆகும்.

நிறம்பகுமியல்

  • வெவ்வேறு வகையான நிறம்பகுமியல் முறைகள் இருப்பதுடன் , அவற்றில் இரு அவத்தைகளாக அசையக் கூடிய இயங்கும் அவத்தையும் அசையாத நிலையான அவத்தையும் காணப்படும்.
  • இயங்கும் அவத்தையில் கரையும் வெவ்வேறு சேர்வைகள் வேறுபட்ட கதியில் நிலையான அவத்தையில் பயணிக்கும் / அசையும். எனவே இவை ஒன்றிலிருந்து ஒன்று வேறாக்கப்படும்.
  • நிலையான அவத்தையானது சிலிக்கா போன்ற திண்மமாகவும் இயங்கும் அவத்தை சேதனக் கரைப்பான்களான கெக்சேன் , எதனோல் போன்ற திரவமாகவும் உள்ளபோது , கரைந்துள்ள சேர்வைகளுக்கும் கரைப்பான் மூலக்கூறுகளுக்கும் இடையிலுள்ள இடைத்தாக்க விசைகளும் , இவற்றிற்கும் சிலிக்கா துணிக்கைகளின் மேற்பரப்பிற்கும் இடையிலுள்ள இடைத்தாக்க விசைகளும்கரைந்துள்ள சேர்வையின் இயக்கக்கதியைக் கட்டுப்படுத்துகின்றன. சிலிக்கா துணிக்கைகளின் மேற்பரப்பு இங்கு ஈடுபடுவதனால் இது புறத்துறிஞ்சல் நிறம்பகுமியல் (adsorption chromatography) என அழைக்கப்படும்.
  • நிலையான அவத்தை ஒரு கடதாசித்தாளினுள் சிக்குண்ட அல்லது அகப்பட்ட நீர் மூலக்கூறுகள் போன்ற திரவமாகவும் இயங்கும் அவத்தை நீருடன் கலக்காத சேதனக் கரைப்பானாகவும் (n-butanol) உள்ளபோது , கரைந்துள்ள சேர்வையின் சேதனக் கரைப்பானிற்கும் (இயங்கும் அவத்தை) நீருக்கும் (நிலையான அவத்தை) இடையில் உள்ள பங்கீடானது , அக் கரைந்துள்ள பதார்த்தத்தின் இயங்கும் கதியைக் கட்டுப்படுத்தும். இவ்வகையான நிறம்பகுமியல் பங்கீட்டு நிறம்பகுமியல் (partition chromatography) என அழைக்கப்படும்.
  • நிறம்பகுமியலானது சிறிய அளவுத் திட்டத்தில் கலவைகளைப் பகுப்பாய்வு செய்வதற்கும் , பெரிய அளவுத் திட்டத்தில் சேர்வைகளை வேறுபடுத்த /தூய்மையாக்கவும் பயன்படுத்தப்படும்.
  • சாற்றுத்தைலங்கள் போன்ற ஆவிப்பறப்புள்ள சேர்வைகளின் கலவைகளானது வாயுநிறம்பகுமியலினால் பகுப்பாய்வு செய்யப்படும். இங்கு இயங்கு அவத்தையானது ஒரு வாயுவாகவும் (நைதரசன்) நிலையான அவத்தையானது ஒரு ஒடுங்கிய குழாயில் காணப்படும் திண்மம் அல்லது திரவமாகவும் இருக்கும்.வாயு நிறம்பகுமியலில் குழாயின் வழியே சேர்வைகளின் இயக்கத்தின் கதியானது அவற்றின் கொதிநிலையிலும் அவை நிலையான அவத்தையுடன் கொண்டிருக்கும் இடைத்தாக்கங்களிலும் தங்கியிருக்கும்.

எதனோல் உற்பத்தி

  • எதனோலானது வாசனைத் திரவியங்களினதும் சுவையூட்டிகளினதும் கரைப்பானாக பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றது. இது இரசாயனத் தாக்கங்களின் ஊடகமாகவும் பயன்படுகின்றது. அத்துடன் இது மிகவும் அதிகளவில் சூழல் நேயமான , மீளப் புதுப்பிக்கக்கூடிய எரிபொருளாகவும் பயன்படுத்தப்படுகின்றது.
  • எதனோலானது கைத்தொழில் ரீதியாக எதீனின் நீரேற்றத்தின் மூலம் / சீனி / மாப்பொருளின் மதுவம் மூலமான நொதித்தலினாலோ தயாரிக்கப்படுகின்றது.
  • அற்ககோல் குடிபானங்களில் உள்ள எதனோலானது வேறுபட்ட தாவர மூலங்களின் நொதித்தலினால் பெறப்படுகின்றது.
    உ+ம்: திராட்சை (வைன்) , பார்லி (பியர்)
    கைத்தொழில் ரீதியான அற்ககோலானது தானியங்கள் அல்லது முளைகளின் (மொலாசஸ்) நொதித்தலினால் பெறப்படுகின்றது.
  • நொதித்தலினால் பெறப்பட்ட திரவக் கரைசலை காய்ச்சி வடிப்பதனால் உயர்மட்டமான எதனோலைக் கொண்ட உற்பத்திகளைப் பெறலாம்.
    உ+ம்: பிரான்தி (அண்ணளவாக 40%) – வைனின் காய்ச்சி வடிப்பின் மூலம் பெறப்படும்.
    சாராயம் (அண்ணளவாக 40%) – தென்னங்கள்ளின் காய்ச்சி வடிப்பின் மூலம் பெறப்படும்.
  • எதனோல் கரைசலின் பகுதிபடக் காய்ச்சி வடித்தல் மூலம் பெறப்படக்கூடிய அதிகூடிய செறிவுள்ள எதனோலானது 95.6% ஆகும்.(Rectified spirit)

 

RATE CONTENT 0, 0
QBANK (0 QUESTIONS)
Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank