Please Login to view full dashboard.

வளி மாசடைதலுடன் தொடர்புடைய பிரச்சினைகள்

Author : Admin

0  
Topic updated on 02/14/2019 09:37am
  • CO (g) , H2S(g) ,SO2 (g) , SO3 (g), NO(g) , NO2 (g), CO2 (g) ஆகிய அசேதனச்சேர்வைகளும் ஐதரோ காபன்கள் ,ஏலோஐதரோ காபன்கள் , காபன் , தூசு போன்ற துணிக்கைகள் உள்ளடங்கலாக சேதனச் சேர்வைகள் வளிமண்டல அமைப்பை மாற்றுவதில் பங்களிப்பு செய்கின்றன.
  • இயற்கையாக நடைபெறும் சேதனப் பதார்த்தங்களின் காற்றின்றிய பிரிந்தழிவின் போது உருவாகும் மெதேன் ஒட்சியேற்றப்படும்போது CO(g) வளிமண்டலத்தினுள் விடப்படுகின்றது. மோட்டார் வாகனங்களில் நடைபெறும் உட்தகனம் உள்ளடங்கலாக எல்லா குறைதகனங்களின் போதும் CO(g) வெளியேற்றப்படுகின்றது.
  • கந்தகத்தைக் கொண்ட உயிர்ச்சுவட்டு எரிபொருட்களின் தகனத்தின் போதும் , எரிமலை குமுறலின் போதும் , சேதனப் பதார்த்தங்களின் உயிரியல் பிரிந்தழிவின் போதும் , சல்பேற்றுக்கள் தாழ்த்தலடையும் போதும் , உலோக சல்பைட்டுக்களிலிருந்து உலோகங்கள் பிரித்தெடுக்கப்படும் பொழுதும் SO2(g) வளிமண்டலத்தைச் சென்றடைகின்றது.SO2(g) ஒட்சிசனுடன் தாக்கமடைந்து SO3(g) உருவாக்குகின்றது.SO2(g)ஒட்சியேற்றமடையும் வீதத்தை NO(g) அதிகரிக்கின்றது.
  • மின்னலின் போது ஏற்படும் மின்னிறக்கம் மாசாக்கிகளின் தோற்றுவாய்கள் போன்றவற்றால்  NOx (g), [NO(g), NO2 (g)] வளிமண்டலத்தைச் சென்றடைகின்றது.உயிர்ச்சுவட்டு எரிபொருட்களின் தகனமே பெருமளவு NOx(g) ஐ வெளியேற்றுகின்றது.அத்தோடு எஞ்சின்களின் அகத்தகன வெளியேற்றுகை மூலமும் NOx பெருமளவு வளிமண்டலத்தை சென்றடைகின்றது.
  • நுண்ணங்களினால் சேதனப் பதார்த்தங்களின் பிரிகை , சல்பேற்று அயன்களின் தாழ்த்தல் என்பவை H2S இன் மிகப் பொதுவான இயற்கை முதலாக உள்ளன.
  • ஐதரோ காபன்கள் பரந்தளவில் எரிபொருளாக பயன்படுத்தப்படுகின்றது. இது நேரடியாக அல்லது சில ஐதரோ காபன்களின் குறைதகனத்தின் விளைவாக வளிமண்டலத்தை அடைகின்றது. கட்டுப்பாடற்ற வாகனங்களின் புகைபோக்கிகள் அற்கேன் , அற்கீன் மற்றும் அரோமற்றிக் ஐதரோ காபன்களை வெளியேற்றுகின்றன.நீரில் சேதனப் பதார்த்தங்களின் காற்றின்றிய பிரிகையின் போதும் பெருமளவு மெதேன் உண்டாகின்றது.

பச்சைவீட்டு விளைவு

  • சூரியனிலிருந்து பெறப்படும் சக்திக்கும்  பூமியினால் மீளக் கதிர்வீசப்படும் சக்திக்கும் இடையே உருவாகும் நிலையான சமநிலையினால் பூமியின் வெப்பநிலை மாறாது பேணப்படுகின்றது. பூமியின் வெப்பநிலையை சீராக பேணுவதற்கான ஒரு பொறிமுறையே பச்சைவீட்டு விளைவாகும்.
  • பூமியிலிருந்து கடத்தல் , மேற்காவுகை , கதிர்வீச்சு போன்ற முறைகளினால் சக்தி இழக்கப்படுகின்றது.
  • நீரின் ஆவியாதல் வெப்ப உள்ளுறை வடிவத்தில் மேற்காவுகை  வெப்பத்தை காவிச்செல்கின்றது. நீராவி ஒடுங்கும் போது வெப்பத்தை வெளிவிடுகின்றது.
  • பூமியிலிருந்து சக்தியை காவி செல்லும் கதிர்வீசல்கள் செந்நிற கீழ்பகுதிக்குரிய நீண்ட அலை நீளமுடைய அலைகளாகும்.
  • வளிமண்டலத்தில் காணப்படும் CO2 (g), நீராவி , மெதேன் , டைநைதரசன் ஒட்சைட்டு, O3 , SO2 , CFC ஆகிய வாயுக்கள் பெருமளவு கதிர்களை அகத்துறிஞ்சி மீண்டும் பூமியை நோக்கிச் செலுத்துவதன் மூலம் பூமியிலிருந்து காலப்படும் கதிர்ப்புகளில் சில மீளவும் பூமியை வந்தடைகிறது. இதனால் பூமியின் மேற்பரப்பு வெப்பநிலை பேணப்படுவதுடன் உயிரினங்கள் வாழ்வதற்கேற்ற காலநிலையை ஏற்படுத்துகிறது.இத்தோற்றப்பாடு பச்சை வீட்டுவிளைவு எனப்படும். பச்சைவீட்டு விளைவுக்கு காரணமான வாயுக்கள் பச்சைவீட்டு வாயுக்கள் எனப்படும்.

வளி மாசடைதலுடன் தொடர்புடைய பிரச்சினைகள்

  • பூகோள வெப்பமாதல்
  • அமில மழை
  • ஒளி இரசாயனப் புகார் (Photochemical smog)
  • ஓசோன் படை நலிவடைதல்

 

பூகோள வெப்பமாதல்

 

  • பச்சைவீட்டு வாயுக்கள் அனுமதிக்கக்கூடிய அளவினை விட கூடுதலாக நிலவலாம்.இதனால் வளிமண்டலத்தின் வெப்பநிலை உயரும். இது பூகோள வெப்பமாதல் எனப்படும்.
  • CO2 (g) பூகோள வெப்பமாதலில் முக்கிய இடம் வகிக்கிறது. வேறு உதாரணங்களாவன NOx உம் CFC உம் ஆகும். CFC இன் அளவு வளிமண்டலத்தில் குறைவாகக் காணப்படுகின்ற போதிலும் அவை நீண்ட வாழ்நாட்காலம் உடையவை. அத்துடன் IR கதிர்ப்புகளை அகத்துறிஞ்சும் ஆற்றல் மிகக் கூடியவை. எனவே அவற்றின் பங்களிப்பு மிக உயர்வாகும்.
  • பூகோள வெப்பமாதலின் விளைவாக ,
    • துருவப் பகுதி பனிக்கட்டி உருகுதல்
    • கடல்நீரின் வெப்பவிரிவால் சிறு தீவுகள் கடலில் மூழ்குதல்
    • மண்ணின் ஈரப்பதன் அற்றுப் போவதால் பாலைவனமாதல்
    • நன்னீர் வற்றிப் போதல்
    • காலநிலை மாற்றம் ஏற்படுதல்
    • உயிரினப் பல்வகைமை மாறுபடுதல்
  • வளியிலுள்ள CO2 இல் குறிப்பிடத்தக்களவு நீரில் கரையும். இதனால் இது பூகோள வெப்பமாதலில் பங்களிப்புச் செய்யும் அளவு குறைக்கப்படும். எனினும் வெப்பநிலை அதிகரிப்புடன் CO2 நீரில் கரைதல் குறைக்கப்படுவதால் கரைந்த CO2 மீண்டும் வளிமண்டலத்தை அடையும்.
  • வளியில் CO2 இன் அளவு அதிகரித்தலானது ஒளித்தொகுப்பின் அளவை அதிகரிக்கும்.இது பூகோள வெப்பமாதலின் நேர்விளைவாகும்.

 

அமில மழை

 

  • வளிமண்டலத்திலுள்ள அமில வாயுக்களானது நீரில் கரைந்து அமிலத்தன்மைக்கு பங்களிப்புச் செய்கின்றன.
  • இரண்டு பிரதான காரணிகள் ஆவன
    1. நீரில் அமில வாயுக்கள் கரைதல்
    2. உருவாகும் அமிலத்தின் வலிமை
  • CO2 இன் அளவு உயர் மட்டத்தில் காணப்பட்டாலும் அவற்றின் அமிலத் தன்மைக்கான பங்களிப்பு மிகக் குறைவாகும் (pH 5.1 – 5.8). அத்துடன் இது அமிலமழையாகக் கருதப்படுவதில்லை. ஆனால் NOx , SOx என்பன மிகச் சிறிய அளவில் காணப்பட்டாலும் அவற்றின் பங்களிப்பு மிக உயர்வாகக் காணப்படுவதுடன் pH 4-5 வரை குறைக்கப்படும்.

வளிமண்டல SO2 (g) இன் தாக்கங்கள்:

(1) SO2 (g) + H2O (l) → H2SO3 (aq)
H2SO3 (aq) + H2O (l) → H3O+ (aq) + HSO3¯ (aq)
HSO3¯ (aq) + H2O (l) → H3O+ (aq) + SO3²¯ (aq)

(2) வளிமண்டலத்திலுள்ள ஒட்சியேற்றிகள்  SO2 வை SO3 யாக ஒட்சியேற்றும்.
SO2(g) → SO3 (g)
O2 (g) , O (g) பரஒட்சைட்டுக்கள் என்பன ஒட்சியேற்றிகளாக என்பன தொழில் புரியும். சில உப்புகள் இதை ஊக்குவிக்கும். பின் SO2(g) நீரில் கரைந்து H2SO4 வை உருவாக்கும்.

(3) SO2 , ஒட்சியேற்றி (O2) இரண்டும் மழைத்துளியில் கரையக்கூடியன. மழைத்துளி இரண்டு இரசாயனப் பதார்த்தங்களை ஒன்றாகச் சேர்ப்பதன் மூலம் ஒட்சியேற்ற செயல்முறையை சாதகமாக்கும்.
SO2 (g) + H2O (l) + ½O2 (g) → H2SO4(aq)
H2SO4(aq) + 2 H2O (l) → 2H3O+ (aq) + SO4²¯ (aq)

இவ்வாறே NOx வளிமண்டலத்தில் பின்வருமாறு தாக்கமுறும்.
2NO (g) + O2 (g) → 2NO2 (g)
4NO2 (g) + 2 H2O (l) + O2(g) → 4HNO3 (aq)
HNO3 (aq) → H+(aq) + NO3¯ (aq)

  • அமில மழை,
    • தாவரங்களை சேதப்படுத்துவதுடன்
    • நீர் நிலைகளில் உள்ள மீன்களை இறக்கச் செய்கின்றன. அமில மழையில் காணப்படும் சல்பூரிக்கமிலம் , நைத்திரிக்கமிலம் போன்ற அமிலங்கள் மண்ணிலுள்ள அலுமினியம் சிலிக்கேற்றிலுள்ள அலுமினியத்தைக் கரையச் செய்து நீரினுள் சுயாதீன Al³+  ஐ வெளியேற்றும். இச்சேர்வை பூக்களில் காணப்படும் சீதத்துடன் திரள்வதால் மீன்களின் வாயுப் பரிமாற்றம் பாதிப்படையும்.
    • மழைநீர் மண்ணினூடாக வடிந்து செல்லும் போது போசணைப் பதார்த்தங்கள் மண்ணிலிருந்து அகற்றப்படுவதால் மண்ணின் வளம் குன்றும். அத்துடன் அலுமினியம் அயன்களை விடுவிக்கின்றது. முக்கிய போசணைப் பதார்த்தங்கள் இல்லாது போக அலுமினியம் அயன்களை தாவரங்கள் உறிஞ்சுகின்றன.
      உதாரணம் :Ca²+ , Mg²+ போன்ற அயன்கள் நீரோட்டத்தின் மூலம் அகற்றப்படும்.
    • குறிப்பாக சுண்ணாம்புக் கல்லாலான கட்டடங்கள் , நினைவுச் சின்னங்கள் , ஸ்தூபிகள் சேதமடைகின்றன.
    • உலோகங்கள் அரிப்புக்குள்ளாவதால் கட்டடங்கள் , பாலங்கள் , கப்பல்கள் , மோட்டார் வாகனங்கள் என்பன பாதிப்பு அடைகின்றன.

அமில மழையால் சூழலில் ஏற்படும் மாற்றங்கள்

  • டொலமைற்று , சுண்ணாம்புகல் , மாபிள் என்பன அமில நீரில் கரையும்.
  • சிறிதளவு அமில நிலைமைகளின் கீழ் ,
    CaCO3.MgCO3 (s) + 2H+ (aq) → Ca2+ (aq) + Mg2+ (aq) + 2HCO3-(aq)
    CaCO3(s) + H+ (aq) → Ca2+ (aq) + HCO3-(aq)
    MgCO3 (s) + H+ (aq) → Mg2+(aq) + HCO3-(aq)
    இங்கு கரைய முடியாதவை கரையக்கூடியனவாக மாறும்.
  • செறிந்த அமில நிலைமைகளின் கீழ் ,
    CaCO3(s) + 2H+(aq) → Ca2+ (aq) + H2O (l) + CO2(g)
    MgCO3(s) + 2H+ (aq) → Mg2+(aq) + H2O(l) + CO2(g)
    CaCO3.MgCO3 (s)+ 4H+(aq) → Ca2+(aq) + Mg2+(aq) + 2H2O(l) + 2CO2(g)
  • அமில மழையினால் பாறை , மண் போன்றவற்றில் உள்ள பெருமளவு உப்புகள் கரைக்கப்படுகின்றன.
  • இயற்கையாக காலப்போக்கில் படிப்படியாக மண் அமிலத்தன்மை அடைகிறது. மண்கரைசலில் உள்ள கற்றயன்கள் தாவரங்களால் அகற்றப்பட்டு H+ அயன்களால் மாற்றீடு செய்யப்படுகின்றது.
  • சல்பைட்டுகள் போன்ற கனியுப்புகள் ஒட்சியேற்றப்படுவதனால் அமிலம் உண்டாகும். தாழ்ந்த pH இல் மண்ணிலிருந்து ஏனைய கற்றயன்களை H+ அயன்கள் இடப்பெயர்ச்சி செய்து விடுகின்றன. இவ்வாறு இவை இடப்பெயர்ச்சி செய்யப்படுவதனால் தாவரங்களது வளர்ச்சிக்குத் தேவையான போசணைப் பொருள்களுக்குப் பற்றாக்குறை ஏற்படும். Al3+, Mg2+ , Ca2+ அயன்களை மட்டுமன்றி மண்ணிலிருந்து பார உலோக அயன்களையும் இடப்பெயர்ச்சி செய்து விடுகின்றது.
  • மண்ணின் ஊடாக வடிந்தோடும் அமிலநீரானது Al3+ ஐ கூடுதலாக அகற்றுவதுடன் பாறைகள் வானிலையால் அழிதலையும் ஏற்படுத்தும்.
  • Mg2+ , Ca2+ அயன்களின் செறிவு நீரில் அதிகரிப்பதுடன் நீரின் வன்மையும் அதிகரிக்கின்றது. மேற்பரப்பு நீரில் அமிலத்தன்மை , உவர்தன்மை , நைதரசன் செறிவு போன்றவைகளும் அதிகரிக்கின்றன. அத்தோடு பார உலோக அயன்களின் செறிவும் மேற்பரப்பு நீரில் அதிகரிக்கின்றது.

அமில வாயுக்களை அகத்துறிஞ்சும் முறைகள்

  • அமில வாயுக்களை மூலங்களுடன் தாக்கமடையச் செய்வதன் மூலம் நடுநிலையாக்கலாம். சுண்ணாம்புக்கல் CaCO3 , மக்னீசியம் ஒட்சைட்டு உட்பட பல மூலங்கள் அமில வாயுக்களை அகற்ற உதவும். மேலும் விளைவுகளை பெறுமதிமிக்க சல்பூரிக் அமிலமாக பெரும்படி தயாரிப்பாக மாற்றலாம்.
  • நீர்த்தன்மையான சுண்ணாம்புக்கல் மற்றும் சுண்ணாம்பு வெளிப்பாயும் வாயுவை தூய்மையாக்க பயன்படுகின்றன.
    CaCO3(s) + SO2 (g) → CaSO3 (s) + CO2(g)
    CaO(s) + SO2(g) → CaSO3(s)
    2 CaSO3 (s) + O2 (g) + 2 H2O(l) → 2 CaSO4.2H2O(s)
  • சோடியம் சல்பைற்றுக் கரைசல் தூய்மையாக்கப் பயன்படுத்தப்படும்.
    Na2SO3(s) + H2O(l) + SO2(g) → 2NaHSO3(aq)

 

ஒளி இரசாயனப் புகார் (Photochemical smog)

 

  • வாகனப் புகைவெளிகள் NOx யையும் தகனமடையாத ஐதரோகாபன்களையும் (CxHy) கொண்டிருக்கும். இவை சூரிய ஒளியின் முன்னிலையிலும் 15 ºC இற்கு மேற்பட்ட வெப்பநிலையிலும் ஓசோன் , அல்டிகைட்டுக்கள் peroxyacetyl nitrate (PAN), peroxy benzoyl nitrate (PBN) போன்றவையாக மாற்றப்படும்.
  • இது சூரியஒளியின் முன்னிலையில் இரசாயனப் பொருட்கள் உருவாக்கப்படுவதனால் ஒளி இரசாயனப் புகார் என அழைக்கப்படுகின்றது.
  • புகார் ஓர் மஞ்சள் நிறமந்தாரம் (haze). இது பார்வையை குறைவடைய செய்வதுடன் கண்எரிவை , உறுத்தலை தோற்றுவிக்கின்றது.
  • NO2 ஆனது NO , ‘O’ ஆகப் பிரிவடைதலே ஒளி இரசாயனப் புகாரின் ஆரம்பத்தாக்கம் ஆகும்.

ஒளி இரசாயனப் புகார் உருவாகும் படிமுறைகள்

  • NOx சூரிய ஒளியை அகத்துறிஞ்சி ஒளிப்பகுப்பிற்கு உள்ளாகும்.
    NO2 → NO + O
  • உருவாகும் அணுநிலை ஒட்சிசன் O2 மூலக்கூற்றுடன் இணைந்து
    1.  ஓசோனை உருவாக்கும் O + O2 + M → O3 + M (M என்பது வாயு நிலையில் சக்தியை அகத்துறிஞ்சும் ஒரு உடலாகும்.இது வளியிலிருந்து உருவாகிய ஒரு துணிக்கையாக அல்லது வாயுவொன்றாக இருக்கலாம்.)
    2. OH மூலிகத்தை உருவாக்கும்.
      screenshot-1
  • உருவாகும் OH மூலிகம் வளியிலிருந்து உருவாகிய ஏனைய துணிக்கைகளை மூலிகங்களாக மாற்றி தொடர்ந்து இம் மூலிகங்கள் தாக்கத்திற்கு உட்பட்டு அல்டிகைட்டுக்கள் PAN, PBN போன்றவற்றை உருவாக்கும்.

ஒளி இரசாயனப் புகாரின் விளைவுகள்

  • மனிதனில் பல உடல் நலத் தீங்குகளை ஏற்படுத்தும். (சுவாசத் தொகுதியை பாதிக்கின்றது. இருமல் , இழுப்பு போன்றவற்றை ஏற்படுத்துகின்றது.)
  • பொருட்களைச் சேதப்படுத்துகின்றது. (இரட்டை பிணைப்புகளில் பிளவை ஏற்படுத்துவதன் மூலம் இறப்பரை சிதைக்கின்றது. நிறச்சாயங்களை வெளிற்றுகின்றது.)
  • வளிமண்டலத்தில் சில விளைவுகளை ஏற்படுத்துகின்றன. (காற்று செல் (aerosol particles) துணிக்கைகள் ஒளியை சிதறச் செய்து பார்வையை குறைக்கிறது.)
  • தாவரங்களிற்கு நச்சுத்தன்மையுடையதால் வளர்ச்சியை பாதிக்கின்றது. இது உணவு உற்பத்தியைப் பாதிக்கலாம்.

 

ஓசோன் படை நலிவடைதல்

 

  • படை மண்டலத்தில் ஓசோன் படலம் காணப்படுகிறது. இப்படலம் பெருமளவு UV கதிர்கள் பூமியின் மாறன் மண்டலத்தை அடைவதை தடை செய்கின்றது.
  • O2 (g), O3 (g) தொடர்பான சில தாக்கங்கள்.
    • O2(g) சூரியனிலிருந்து காலப்படும் UV கதிர்களால் பிரிகையடைகின்றன.
      O2 (g) → O (g) + O (g)     ΔH > 0
    • சில அணு ஒட்சிசன்கள் (O) இரு ஒட்சிசன் மூலக்கூறுகளுடன் இணைந்து மூவொட்சிசன் மூலக்கூறுகளைக் கொடுக்கின்றன.
      O (g) + O2 (g) + M → O3 (g) + M     ΔH < 0
    •  O3 (g) UV ஒளியை வெவ்வேறு அதிர்வெண்களில் அகத்துறிஞ்சி பிரிகையடைகின்றன.
      O3(g) → O2(g) + O(g)       ΔH > 0
    • O3 மூலக்கூறு O அணுவுடன் தாக்கி O2 மூலக்கூறுகளை கொடுக்கின்றன.
      O3(g) + O(g) → 2O2(g)
      இயற்கைச் சமநிலையானது ஓசோன் படையின் தடிப்பை மாறாது பேணுகின்றது.
  • ஓசோன்  சில சுயாதீன மூலிகங்களால் சிதைவுக்குள்ளாகின்றது.இவ் மூலிகங்கள் ஊக்கிகளாகச் செயற்பட்டு ஆயிரக்கணக்கான ஓசோன் மூலக்கூறுகளைச் சேதமடையச் செய்யும். இவ்வாறு படை மண்டலத்தில் ஓசோன் ஊக்கல் அழிவிற்குள்ளாதல் ஓசோன் படை நலிவடைதல் என அழைக்கப்படும்.
  • ஓசோன் படை நலிவடைதலின் பிரதான காரணியாக குளோரோபுளோரோகாபன்களில் இருந்து உருவாகும் குளோரீன் மூலிகம் பங்களிக்கின்றது. இந்த குளோரோபுளோரோ காபன்கள் மாறன் மண்டலத்தில் உறுதியாகக் காணப்படும் அதேவேளை படைமண்டலத்தில் UV ஒளியுடன் மூலிகங்களை உருவாக்கும்.screenshot-12
  • தோல் புற்றுநோய் உண்டாவதற்கும் , கட்காசம் ஏற்படுவதற்கும் UV கதிர்களுக்கு நேரடித் தொடர்பு காணப்படுகிறது.எனவே ஓசோன் படலம் எம்மை பாதுகாக்கின்றது.
RATE CONTENT 0, 0
QBANK (0 QUESTIONS)
Comments Hide Comments(0)
இங்கே உங்கள் எழுத்துக்களை தமிழில் பதிவு செய்ய, நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் ‘Space Bar’ ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்

Leave a Reply

Astan Publications
  • - This Questions is not available for FREE Users
  • - Please call us to become Premium Member
  • - Access to over 2000+ Questions & Answers
  • - Online active text through our Qbank